குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - இன்னும் அதிகம் பேறுபெற்றோர்

கடவுளின் வார்த்தையை வெறுமனே கேட்டுக் கொண்டிராமல் அதனை இதயத்துள் அசைபோட வேண்டும். அது வாழ்வோடு உரசி, செயல்பாட்டு நிலைக்கு நம்மைக் கடத்திச் செல்ல வேண்டும்.

பெண் ஒருவர் இயேசுவிடம், உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் என உரைக்க, இயேசுவோ, இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர், (லூக் 11:27&28) என்றார்.

இயேசு மனித ஆளுமைகள் நிறைந்த சிறந்த பண்பாளர். தம் மகிழ்வு - கவலை, கனிவு - கோபம், பொறுமை - பொறுப்பு, தாகம் - வேகம், அழுகை - அக்களிப்பு, எதிர்ப்பு - எரிச்சல் என எல்லாவற்றையும் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டவரல்லர். அவற்றை எதார்த்தமாக,

எழுச்சியாக, ஏழை, எளியவர் சார்பாகத் துணிச்சலாக வெளிப்படுத்தினார். அவரது வாழ்வியல் பண்பினால் ஈர்க்கப்பட்ட ஒருவர்தாம் அவரோடு நில்லாமல் அவர்தம் தாயையும் பாராட்டுகின்றார்.

பாராட்டுகளிலும் பசப்பு மொழிகளிலும் நனைந்து தற்பெருமை கொள்பவரல்லர் இயேசு. அதன் ஊடாகச் சென்று வாழ்வின் வழியைக் காட்டும் நல்லெண்ணம் மிக்கவர். எனவேதான் தனக்கென உதிர்க்கப்பட்ட புகழ்தலை ஒதுக்கிவிட்டு இறைவார்த்தை வழியில் ஒழுகுதலை அழுத்திச் சொல்கின்றார். கடவுளின் வார்த்தையை வெறுமனே கேட்டுக் கொண்டிராமல் அதனை இதயத்துள் அசைபோட வேண்டும். வாழ்வோடு உரசி, செயல்பாட்டு நிலைக்கு நம்மைக் கடத்திச் செல்ல வேண்டும். அச்செயலை ஆய்ந்து, மீண்டும் மீட்கும் மனிதராவதே மாமனிதம். வாழ்வின் ஒவ்வொரு செயலையும் ஊடுருவக் காத்திருக்கிறது இறைவார்த்தை.

இறைவா! உயிருள்ள உம் வார்த்தையை உயிர்த்துடிப்போடு செயலாக்கிட உம் உடனிருப்பை வெளிப்படுத்தும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2025, 16:06