திருத்தந்தை பிரான்சிஸ், இறைமந்தையின் உண்மையான ஆயர்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அனைவரிடமும் திறந்த இதயம் கொண்டிருந்தார். காலத்தின் அறிகுறிகளையும் திருஅவையில் தூய ஆவியார் தூண்டி எழுப்பியவற்றையும் கூர்ந்து கவனித்த ஒரு திருத்தந்தையாக விளங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 26, சனிக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு திருப்பலியில் கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் Giovanni Battista Re அவர்கள் ஆற்றிய மறையுரை.

அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல முறை திருப்பலியைக் கொண்டாடி, பெரும் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மாட்சிமை பொருந்திய இந்தப் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மரணமடைந்த அவரது உடலைச் சுற்றி நாம் சோகமான இதயங்களுடன் இறைவேண்டல் செய்துகொண்டிருக்கின்றோம்.

மரணம் முடிவல்ல

இருப்பினும், மனித வாழ்வு கல்லறையில் முடிவடைவதில்லை, மாறாக இறைத்தந்தையின் இல்லத்தில்  முடிவில்லா மகிழ்ச்சிநிறை வாழ்வில் நிறைவடைகிறது என்ற உறுதியான நம்பிக்கையில் நாம் நிலைநிறுத்தப்படுகிறோம்.

இத்தருணத்தில் கர்தினால்கள் அவையின் சார்பாக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல நாடுகளிலிருந்தும் நமது மறைந்த திருத்தந்தையின் மீது தங்கள் அன்பு, பாசம், மற்றும் மரியாதையை வெளிப்படுத்த வந்துள்ள நாட்டுத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு அவர் சென்றுள்ளதைத் தொடர்ந்து அண்மைய நாட்களில் நாம் கண்ட அன்பின் வெளிப்பாடானது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தந்தைக்குரிய தலைமைத்துவம் எந்தளவுக்கு ஆழமாக மக்களின் மனங்களையும் இதயங்களையும் தொட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஏப்ரல் 20, கடந்த உயிர்ப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும், புனித பேதுரு பெருங்கோவிலின் மேல்மாடத்திற்கு வந்து தனது ஆசீரை நமக்கு வழங்கிய அவரது உருவம் நமது நினைவில் நிழலாடுகின்றது.

அதனைத் தொடர்ந்து அவர் கீழிறங்கி வந்து தனது திறந்தவெளி வாகனத்தில் பயணித்து பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலிக்காகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்குத் தனது வரவேற்பையும் வாழ்த்துக்களையும் வழங்கிவிட்டுச் சென்றார்.

ஆகவே இத்தருணத்தில், நமது இறைவேண்டல்களுடன் நமது அன்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை கடவுளின் கரங்களில் ஒப்படைப்போம். அவர் தனது மகத்தான அன்பின் ஒளியில் என்றுமுள்ள நிலைவாழ்வின் மகிழ்வை அவருக்கு வழங்கட்டும்.

ஒரு நல்ல மேய்ப்பராகத் திகழ்ந்தவர்

இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார் (காண்க யோவா 21:15) என்ற இந்த நற்செய்திப் பகுதியால் அறிவொளிப்பெற்று வழிநடத்தப்படுகிறோம்.

இது, "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (காண்க மாற் 10:45) என்று மொழிந்த நமது ஆண்டவர் இயேசுவின் அடிச்சுவடுகளில், பேதுரு மற்றும் அவரது வாரிசுகளின் நிலையான பணியாக இருந்து வருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வில் வலுவின்மையும் துன்பமும் நிலவியபோதிலும், தனது மண்ணகத்திற்குரிய வாழ்க்கையின் இறுதிநாள் வரை தன்னை வழங்கும் (self-giving) பாதையைத் தேர்ந்துகொண்டு அதனைப் பின்பற்றினார். தனது மந்தையின் ஆடுகளை அன்புகூர்ந்து அவற்றிற்காகத் தன் உயிரையும் கொடுக்கத் துணிந்த நல்ல மேய்ப்பரான நமது ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்.

"பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை" (திப 20:35) என்று திருத்தூதர் பவுல் மேற்கோள் காட்டிய இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு, அவர் வலிமையுடனும் அமைதியுடனும், தனது மந்தையான கடவுளின் திருஅவைக்கு நெருக்கமாக இருந்தார்.

அனுபவம் கொண்ட இயேசு சபைப் பணியாளர்

கடந்த 2013-ஆம் ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதியன்று, திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்கு கர்தினால்கள் அவையால் தேர்வுசெய்யப்பட்டபோது, ஓர் இயேசு சபை அருள்பணியாளராக அச்சபையில் மிகுந்த அனுபவம் பெற்றவராக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, புவெனஸ் ஐரிஸ் மறைமாவட்டத்தில் இருபத்தொரு ஆண்டுகள் மேய்ப்புப் பணியால் வளப்படுத்தப்பட்டார். முதலில் துணை ஆயராகவும், பின்னர் இணைத் துணை ஆயராகவும், பின்னர் பேராயராகவும் பணியாற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயரை அவர் உடனடியாகத் தேர்வு செய்ய முடிவு செய்தது, அவர் தனது திருத்தந்தை பணியை அடிப்படையாகக் கொள்ள விரும்பிய மேய்ப்புத் திட்டம் மற்றும் பாணியைக் குறிப்பதாகத் தோன்றியது, இது அசிசி நகர் புனித பிரான்சிஸின் மனநிலையிலிருந்து அவர் உத்வேகம் பெற்றதால் எழுந்தது.

அவர் தனது மனநிலையையும், மேய்ப்புத் தலைமைத்துவ வடிவத்தையும் நிலைநிறுத்திக்கொண்டார், மேலும் தனது உறுதியான ஆளுமையின் மூலம், திருஅவையின் நிர்வாகத்தில் உடனடியாகத் தனது முத்திரையைப் பதித்தார்.

அவர் தனிநபர்களுடனும் மக்களுடனும் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார், அனைவருடனும் நெருக்கமாக இருக்க ஆர்வமாக இருந்தார், சிரமத்தில் உள்ளவர்கள் மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தினார், குறிப்பாக, நம்மில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும், மிகச் சிறியவர்களுக்கும் அளவில்லாமல் தன்னைக் கொடுத்தார்.

மக்களில் ஒருவராக வாழ்ந்தவர்

அவர் மக்களில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அனைவரிடமும் திறந்த இதயம் கொண்டிருந்தார். காலத்தின் அறிகுறிகளையும் திருஅவையில் தூய ஆவியார் தூண்டி எழுப்பியவற்றையும் கூர்ந்து கவனித்த ஒரு திருத்தந்தையாக இருந்தார்.

அவரது தனித்துவமான சொற்கள் மற்றும் மொழியாற்றலால் அவர் எப்போதும் நற்செய்தியின் ஞானத்துடன் நமது காலத்தின் பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்ட முயன்றார். விசுவாசத்தின் ஒளியால் வழிநடத்தப்பட்ட ஒரு பதிலை வழங்குவதன் வழியாகவும், அண்மைய ஆண்டுகளில் சவால்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில் கிறிஸ்தவர்களாக வாழ நம்மை ஊக்குவிப்பதன் வழியாகவும் அவர் அவ்வாறு செய்தார், அதை அவர் "சகாப்த மாற்றம்" என்று விவரிக்க விரும்பினார்.

தனித்தன்மையால் அனைவரையும் கவர்ந்தவர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தனித்தன்மையால், திருஅவையிலிருந்து வெகு தொலைவில் உள்ளவர்களிடமும் கூட, மிகவும் எளிமையான முறையில் உரையாற்றும் திறனையும் கொண்டிருந்தார். மனித அன்பில் நிறைந்தவராகவும், இன்றைய சவால்களை ஆழமாக உணர்ந்துகொண்டவராகவும் இருந்த அவர், இந்த உலகமயமாக்கல் காலத்தின் கவலைகள், துன்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை உண்மையிலேயே பகிர்ந்து கொண்டார்.

மேலும் வரவேற்பு மற்றும் செவிசாய்க்கும் அவரது தனிவரத்தால், இன்றைய கால உணர்வுகளுக்கு ஏற்ற நடத்தையுடன் இணைந்து, இதயங்களைத் தொட்டு, தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை மீண்டும் எழுப்ப முயன்றார். நற்செய்தி அறிவிப்புப் பணியே திருத்தந்தையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்தது. தெளிவான மறைபரப்புத் தொலைநோக்குப் பார்வையுடன்,  ‘நற்செய்தியின் மகிழ்வு’ என்ற தனது முதல் திருத்தூது மடல் வழியாக நற்செய்தியின் மகிழ்ச்சியைப் பரப்பினார். கடவுளிடம் தங்களை ஒப்படைப்பவர்கள் அனைவரின் இதயங்களையும் நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் நிரப்பும் மகிழ்ச்சி இது.

திருஅவை அனைவருக்குமான ஓர் இல்லம்

திருஅவை என்பது அனைவருக்குமான ஓர் இல்லம், அதன் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் ஓர் இல்லம் என்ற நம்பிக்கையே அவரது பணியின் வழிகாட்டும் நூலாக அமைந்திருந்தது. காயமடைந்தவர்களைப் பராமரிக்கும் "கள மருத்துவமனை" போல, திருஅவை, மக்களின் நம்பிக்கைகள் அல்லது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் சரி, உண்மையான போராட்டங்களை இரக்கத்துடன் நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார்.

புலம்பெயர்ந்த மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக அவர் ஆற்றிய உணர்வுமிக்க அறிவுரைகளும் எண்ணற்றவை. ஏழைகளின் சார்பாகப் பணியாற்று வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். ISIS என்னும் அமைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தில் மதங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுப்பதற்காக ஈராக் நாட்டிற்கு 2021-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட 47-வது திருத்தூதுப் பயணம் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. மேலும் ஆசியா-ஓசியானியாவிற்கு 2024-ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் உலகின் மிகத் தொலைதூரப் பகுதிகளைக் கூட சென்றடைவதற்கான அவரது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டியது.

கடவுள் நம்மை மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இரக்கத்தின் நற்செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் தனது வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தார்.

இரக்கம்  என்பது "நற்செய்தியின் இதயம்" என்பதை முன்னிலைப்படுத்த, இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கு நம்மை அழைத்தார். இரக்கமும் நற்செய்தியின் மகிழ்ச்சியும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இரண்டு சிறப்புச் சொற்களாக இருந்தன.

"கழிவு கலாச்சாரத்திற்கு" மாற்றாக, "சந்திப்பு மற்றும் ஒன்றிப்பின் கலாச்சாரத்தின்" முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ‘உடன்பிறந்த உறவு’ என்ற கருத்தை அவர் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக, ‘அனைவரும் உடன்பிறந்தோரே’ என்ற அவரது திருத்தூது மடல் வழியாக, உடன்பிறந்த உறவை ஊக்குவித்து அனைத்து மனிதரும் இறைத்தந்தையின் குழந்தைகள் என்பதை எடுத்துக்காட்டினார். மேலும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த நமது பகிரப்பட்ட உரிமையை அவர் தொடர்ந்து நமக்கு நினைவூட்டினார்.

உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புவோம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019-ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது,​​ கடவுள் அனைவருக்கும் தந்தை என்பதை நினைவுகூர்ந்து, உலக அமைதி மற்றும் ஒன்றித்து வாழ்வதற்கான மனித உடன்பிறந்த உறவு குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

உலகெங்கிலும் வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரையாற்றியபோது, 'இறைவா உமக்கே புகழ்’ (Laudato si’) என்ற தனது திருமடலில், அனைவருக்குமான கடமைகள் மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் பகிரப்பட்ட பொறுப்புக் குறித்த கவனத்தை ஈர்த்து, "யாரும் தனியாக மீட்கப்படுவதில்லை" என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து போருக்கு எதிராகப் பேசினார், உயிர் இழப்பு மற்றும் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளின் அழிவு உள்ளிட்ட போரின் பேரழிவு விளைவுகளை எடுத்துக்காட்டினார். போர் எப்போதும் உலகை மோசமான நிலையில் விட்டுச் செல்கிறது என்பதையும், இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு துயரமானத் தோல்வியைத் தருகிறது என்பதையும் வலியுறுத்தினார். மோதல்களுக்குத் தீர்வு காண அமைதி, தெளிந்து தேர்தல் மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

"பிரிவினை சுவர்களை அல்ல, உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புங்கள்" என்பது அவர் நமக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கூறிய அறிவுரை. மேலும் திருத்தூதர் பேதுருவின் வழிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்த விசுவாசப் பணி எப்போதும் மனிதகுலத்தின் பணியுடன் அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.

திருஅவையை ஆசீர்வதியுங்கள்

கடவுள் தனது அன்பின் மகத்தான தன்மையில் அவரை வரவேற்கும் பொருட்டு,  ஆன்மிக ரீதியில் கிறிஸ்தவர்களாக ஒன்றிணைந்துள்ள நாம், அவருக்காக இறைவேண்டல் செய்வதற்காக இங்கே கூடியிருக்கின்றோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உரைகளையும் கூட்டங்களையும் நிறைவுசெய்யும் தருணங்களில் எல்லாம், "எனக்காக செபிக்க மறக்காதீர்கள்" என்றுதான் கூறி முடிப்பார்.

எங்கள் அன்பிற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, எங்களுக்காக இறைவேண்டல் செய்யுங்கள் என்று இப்போது நாங்கள் உங்களிடம் வேண்டுகிறோம். கடந்த உயிர்ப்பு ஞாயிறன்று, இந்தப் பெருங்கோவிலின் மேல்மாடத்திலிருந்து கடவுளின் மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்ததுபோல, திருஅவையையும், உரோமை நகரையும், அனைத்துலகத்தையும் விண்ணகத்திலிருந்து ஆசீர்வதியுங்கள். ஆனால் அதேவேளையில், நேர்மையான இதயத்துடன் உண்மையைத் தேடும் மற்றும் நம்பிக்கையின் ஒளியை உயர்த்திப் பிடிக்கும் மனிதகுலத்தையும் தழுவிக்கொள்ளுங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஏப்ரல் 2025, 14:53