செவிசாய்த்தலைக் கற்றுக்கொள்ளுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலக அமைதிக்கு உதவும் செவிசாய்த்தலைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும், தாத்தா பாட்டியை மறந்துவிடாதீர்கள் ஏனெனில் அவர்கள் நமக்கு நிறையக் கற்றுத் தருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த சனவரி 8, அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்திக்க வந்தவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கானக் காணொளிச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். “அன்பான இளையோர்களே, வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது செவிசாய்த்தல், எனவே செவிசாய்க்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும், உங்களிடம் ஒருவர் பேசும் போது அவர் பேசி முடிக்கும் வரை, அவரது குரலுக்கு செவிசாய்த்து பதில் கூற வேண்டியிருந்தால் மட்டும் ஏதாவது கூறுங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களைக் கவனமாகப் பாருங்கள், அவர்கள் முழுவதுமாக செவிசாய்க்காமல் பாதியிலேயே பதில் கூறுபவர்களாக இருக்கின்றார்கள், இது அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவாது என்றும், அதிகமாக செவிசாயுங்கள், ஏனெனில் அது தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதியோர்கள் மேல் அதிகமான அன்பும் அளவற்ற இரக்கமும் கொண்டவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாத்தா பாட்டியை மறந்து விடாதீர்கள் அவர்கள் தங்களது வாழ்வால் நமக்கு நிறையக் கற்றுத் தருகின்றார்கள் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இக்காணொளிச் செய்தியானது Oggi என்னும் வாரஇதழ் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2025, 14:16