மரணம் ஒரு முடிவல்ல, கனி தருவதற்கான மடிதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான ஒன்பது நாள் செப நாட்களின் மூன்றாவது நாளான ஏப்ரல் 28, திங்கள்கிழமையன்று மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தைக்காக திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பல்தசாரே ரெய்னா அவர்கள், ஆயனற்ற ஆடுகள்போல் கத்தோலிக்கர்கள் உணர்வதாக எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் மறைமாவட்டமான உரோம் மறைமாவட்டத்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செயல்படும் கர்தினால் ரெய்னா அவர்கள் திங்களன்று மாலை வழங்கிய மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மரணம் ஒரு முடிவைக் குறிப்பிடவில்லை, மாறாக, கனி தருவதற்காக விதைகள் மண்ணில் மடிய வேண்டும் என்ற உண்மையை எடுத்துக்காட்டி நிற்கின்றன என்றார்.
உரோம் நகர் மக்கள் நம் திருத்தந்தையின் மறைவுக்காக உலக மக்களுடன் இணைந்து துக்கத்தை அனுபவிக்கும் அதேவேளை, தங்கள் ஆயரையும் இழந்துள்ள துக்கமும் உள்ளது என்றார் கர்தினால்.
ஆயனற்ற ஆடுகளின் நிலையை மக்கள் உணர்வதாக உரைத்த கர்தினால் ரெய்னா, மரணம் மற்றும் தீமைகளின் மீது எப்போதும் வாழ்வும் நன்மைத்தனமும் வெற்றி கண்டுகொண்டேயிருக்கும் என்றார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் துவக்கப்பட்ட சீர்திருத்த உணர்வுடன் நாம் அனைவரும் தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்த கர்தினால் ரெய்னா அவர்கள், அச்சத்தையும் உலகாயுத உடன்பாடுகளையும் ஏற்காமல், நற்செய்தி மதிப்பீடுகளில் வேரூன்றியதாக, உறுதியுடன் வழிநடத்தும் பணியை எடுத்து நடத்தும் தலைமைத்துவம் இன்று தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தன் மரணம் வரை விதைகளை விதைத்துச் செல்பவராக செயல்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப்போல், அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்கள் ஆடுகளுக்காக உயிரையும் கையளிக்கும் ஆயர்களாகச் செயல்படவேண்டும் என மேலும் அழைப்பு விடுத்தார், உரோம் நகருக்கான திருத்தந்தையின் பிரதிநிதி, கர்தினால் ரெய்னா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்