கர்தினால்களின் பொதுஅவைக் கூட்டம் கர்தினால்களின் பொதுஅவைக் கூட்டம்  (VATICAN MEDIA Divisione Foto)

கர்தினால்கள் அவையின் 6வது கூட்டத்தின் தீர்மானங்கள்

திருஅவை எதிர்நோக்கும் சவால்கள், தாங்கள் வாழும் கண்டங்களிலும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டுவரும் தீர்வுகள், திருஅவையின் பதிலுரைகள் என்பவை குறித்து கர்தினால்கள் தங்கள் 6வது கூட்டத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புதிய திருத்தந்தைக்கான தேர்தலுக்கு முன்னான திருப்பலி, சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் நுழையும் நேரம் ஆகியவை குறித்து, ஏப்ரல் 29 செவ்வாய்க்கிழமையன்று கர்தினால்கள் அவையின் ஆறாவது கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறாவது கூட்டத்தில் 80 வயதிற்குட்பட்ட, அதாவது திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 124 கர்தினால்கள் உட்பட 183 கர்தினால்கள் கலந்துகொண்டனர், இதில் 20 பேர் இந்த ஆறாவது கூட்டத்தில் உரையாற்றினர்.

இன்றைய உலகில் திருஅவை, அது எதிர்நோக்கும் சவால்கள், தாங்கள் வாழும் கண்டங்களிலும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டுவரும் தீர்வுகள், திருஅவையின் பதிலுரைகள் என்பவை குறித்து கர்தினால்கள் தங்கள் கருத்துக்களை இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.

புதிய திருத்தந்தைக்கான தேர்தலை துவக்கி வைப்பதற்கு முன்னான திருப்பலி, அனைத்து கர்தினால்களின் பங்கேற்புடன் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் நண்பகல் 1 மணி 30 நிமிடங்களுக்கு கர்தினால்கள் அவையின் தலைவர், கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்படும்.

உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு பவுலின் சிற்றாலயத்தில் புனிதர்களின் மன்றாட்டை செபித்தபின் கர்தினால்கள் சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் நுழைவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 12:49