சிஸ்டைன் சிற்றாலயம் (கோப்புப்படம் 2013) சிஸ்டைன் சிற்றாலயம் (கோப்புப்படம் 2013) 

திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவை

மே 7 புதன்கிழமை மாலை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் திருஅவையை வழிநடத்த இருக்கும் 267 ஆவது திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையானது தொடங்க உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வருகின்ற மே 7 புதன்கிழமை மாலை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் திருஅவையை வழிநடத்த இருக்கும் 267 ஆவது திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையானது தொடங்க உள்ளது. எனவே இன்றைய நம் நிகழ்வில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவை குறித்து காணலாம்.

கர்தினால்கள் அவை தோன்றக் காரணம்

திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையினை இலத்தீன் மொழியில் கான்கிளேவ் என்று அழைப்பர் Cum Clave என்ற இலத்தீன் சொற்களிலிருந்து பிறந்த இச்சொல் சாவியுடன் என்ற பொருளை உள்ளடக்கியது. திருஅவையை வழிநடத்த இருக்கும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டுரிமை உடைய கர்தினால்கள் அனைவரும் வத்திக்கானின் ஓர் அறையில் ஒன்று கூடி இத்தேர்தலை நடத்துவர். தொடக்க காலத்தில் திருத்தந்தையர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த முறையில் நிறைய அரசியல் தலையீடுகள்  இருந்துள்ளன. இவ்வுலக அதிகாரங்களால் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலங்களில், இந்த அவைகள் ஆன்மீகத்தைப் பிரதிபலிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, 687-ஆம் ஆண்டில் அருள்பணியாளர்கள், இராணுவம், உரோம் தலைவர் ஆகியோருக்கிடைய பல மோதல்கள் ஏற்பட்டதால், அப்போது திருத்தந்தைத் தேர்தலில் பங்கெடுத்தவர்கள், மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்த செர்ஜியுஸ் என்ற ஓர் அருள்பணியாளரை அழைத்து அவரை இலாத்தரன் மாளிகையில் திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்தினார்கள். அவரே திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸ்.

இவ்வாறு தொடக்க காலத்தில் நடைபெற்ற சில தேர்தல்களில் அரசியல் அதிகாரங்களின் தலையீடுகள் அதிகம் இருந்தன. அதன்பின், 1059-ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் நிக்கோலாஸ், “ஆண்டவரின் பெயரால்” (Nomine Domine) என்ற தலைப்பில் வெளியிட்ட ஆணையின் வழியாக, பேரரசர்களும் உரோமைப் பேரரசரின் அதிகாரிகளும் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையில் தலையிடுவது நிறுத்தப்பட்டது. மேலும் கர்தினால் ஆயர்கள் மட்டுமே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று இதில் கூறப்பட்ட நிலையில், பல அதிகாரப் போராட்டங்கள் தொடர்ந்ததன் காரணமாக பின்னாளில் அனைத்துக் கர்தினால்களும் தேர்தலில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. திருத்தந்தை தூய ஆறாம் பவுல், 1970- ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆணையில் கான்கிளேவில் கலந்து கொள்ளும் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை அதிக பட்சமாக 120 ஆகவும், இவர்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற வரைமுறையை நிர்ணயித்தார். அதுவே இன்று வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எதிர்திருத்தந்தையரின் ஆதரவாளர்கள் உரோமிலிருந்த திருத்தந்தையைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால், 1243-ஆம் ஆண்டில் இத்தாலியின் வித்தெர்போ நகர் திருத்தந்தையின் நகரமாக மாறியது. 1268ம் ஆண்டில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக, அந்நகரிலிருந்த திருத்தந்தை மாளிகையின் பெரிய அறையில் 20 கர்தினால்கள் கூடினர். இரண்டு ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகியும் இவர்கள் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் வருத்தமடைந்த மக்கள் அவ்வறையைப் பூட்டி, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும்வரை அதைத் திறக்காமல் இருந்தனர். அதோடு, அக்கர்தினால்களுக்கு ரொட்டியையும் தண்ணீரையும் தவிர வேறு எதையும் கொடுக்காமல் இருந்ததோடு, தூயஆவி துரிதமாய் இறங்கட்டும என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்த அறையின் மேற்கூரையையும் பிரித்துள்ளனர். இந்த ஆண்டுகளில் இரண்டு கர்தினால்கள் இறந்துள்ளனர். ஒருவர் உடல்நலக்குறைவால் அவ்வறையைவிட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர்தான் கர்தினால்கள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் வேகமாய்ச் செயல்பட்டுள்ளனர். அச்சமயம் 33 மாதங்கள் கழித்து 1271-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தைதான் 10ம் கிரகரி. இவர் அச்சமயம் குருவாகக்கூட இல்லை.

பூட்டிய அறைக்குள் இத்தேர்தல் நடந்ததால், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவைக்கு Cum Clave அதாவது Conclave என்ற பெயர் வந்தது. திருத்தந்தை 10ம் கிரகரி பதவியேற்றவுடன், கான்கிளேவ் ஒரு தனிஅறையில் நடைபெற வேண்டுமென்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். 1878ம் ஆண்டுவாக்கில் இத்தாலியில் திருத்தந்தையின் மாநிலங்கள் வீழ்ச்சியுற்ற பின்னர், இந்தக் கான்கிளேவ் அவை, வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த ஆலயத்தில்தான் இது எப்போதும் நடைபெற வேண்டுமென்று, திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பில் கூறியுள்ளார்

3இதன்படி  மே 7, புதனன்று மாலையில், சிஸ்டைன் சிற்றாலயத்தில், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழிவருபவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை ஆரம்பிக்கவிருக்கின்றது. இது திருஅவையில் இடம்பெறவிருக்கும் 76வது கான்கிளேவ் அவையாகும். கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 135 கர்தினால்களும் மே 7, புதன் காலை 7 மணிக்கு வத்திக்கான் Santa Martha இல்லத்திற்குச் சென்று கான்கிளேவ் முடியும் வரையில் அங்கேயே தங்கியிருப்பார்கள். புதன் காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் அனைத்து கர்தினால்களும் இணைந்து கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே தலைமையில், கான்கிளேவ் அவைக்காகச் செபிக்கும் “pro eligendo Romano Pontifice” என்ற திருப்பலியை நிகழ்த்துவார்கள். பின்னர் அன்று மாலை 4.15 மணிக்கு, இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 135 கர்தினால்களும், Santa Martha இல்லத்திலிருந்து Pauline சிற்றாலயத்திற்குச் செல்வர். அங்கு அவர்கள் தியானம் மற்றும் செபத்தில் ஈடுபட்ட பின்னர் Pauline சிற்றாலயத்திலிருந்து Regia அறை வழியாக, புனிதர்கள் பிரார்த்தனையைப் பாடியேபடியே செல்லும் கர்தினால்கள், சிஸ்டைன் சிற்றாலயம் அடைந்தவுடன் Veni Creator என்ற தூய ஆவியிடம் வேண்டுதல் செய்யும் பாடலைப் பாடுவர். பின்னர் அவரவர் இருக்கையில் அமர்வர். அவர்களின் இருக்கைகள், ஒவ்வொருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஆண்டின்படி குறிக்கப்பட்டிருக்கும். சிஸ்டைன் சிற்றாலயத்தின் நடுவில் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் விவிலியத்தின்மீது கைவைத்து 135 கர்தினால்களும் ஒவ்வொருவராக வந்து உறுதிமொழி எடுப்பர்.

“இத்தேர்தலில் எந்தப் பொதுநிலை அதிகாரிகளின் தலையீடுக்கும் ஆதரவு கொடுக்க மாட்டேன். இத்தேர்தல் குறித்த Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பின்படி, குறிப்பாக, இரகசியம் காப்பாற்றப்படவேண்டிய விதிமுறைகளின்படி நடந்துகொள்வேன், யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் அகிலத் திருஅவையின் மேய்ப்பராகப் பணியைத் தொடருவார். அவர், திருப்பீடத்தின் ஆன்மிக மற்றும் உலகியல் சார்ந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி ஊக்கத்தோடு பாதுகாப்பார்” என்று 135 கர்தினால்களும் உறுதிமொழி எடுப்பார்கள். இந்த உறுதிமொழியைக் காப்பாற்றாதவர்கள் திருஅவையைவிட்டு விலக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து கான்கிளேவ் அவையோடு தொடர்பில்லாத அனைவரும் உடனடியாக வெளியேறுவர். அப்போது சிஸ்டைன் சிற்றாலயமும், 135 கர்தினால்கள் தங்கியிருக்கும் வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லமும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாதவர்களுக்கு மூடப்படும். அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பின்படி இரண்டாவது தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்தினால்களில் குறைந்த வயதுடையவர் சிஸ்டைன் சிற்றாலயக் கதவை மூடுவார். இம்முறை பங்கேற்கும் 135 கர்தினால்களில் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த கர்தினால் BYCHOK Mykola (13.02.80) அவர்களே வயதில் சிறியவர்.

வாக்கெடுப்பு நடக்கும் முறை

கான்கிளேவ் அவையில் கர்தினால்கள் சிறிய செபம் சொல்லி சிறிது நேரம் அமைதி காப்பர். அதன்பின்னர் கான்கிளேவ் அவையின் மூத்த கர்தினால் வாக்கெடுப்பைத் தொடங்கலாமா எனக் கேட்பார். அனைவரும் சரி என்று சொன்னதும், முதல் வாக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு கர்தினால்களிடமும் 2 அல்லது 3 வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். செவ்வக வடிவிலான இந்தச் சீட்டின் மேலே, Eligo Summum Pontificem அதாவது திருத்தந்தையாக நான் தேர்ந்தெடுப்பவர் என இலத்தீனில் எழுதப்பட்டிருக்கும். கீழே ஒரு கோடு இருக்கும். அதில் பெயரை எழுதி, வாக்குத்தாளை இரண்டாக மடித்து, அங்குள்ள திருப்பலி பீடத்தின்மீது வாக்குகளைச் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் மூன்று கிண்ணங்களில், முதல் பெரிய கிண்ணத்தில் ஒவ்வொருவராக வந்து போடுவர். இரண்டாவது கிண்ணம், உடல்நலமின்றி யாரும் வெளியே இருந்தால் அவர்களிடம் சென்று வாங்கி வரும் வாக்குகளைப் போடுவதற்குரியது. மூன்றாவது கிண்ணம், வாக்குகளைச் சரிபார்த்துப் போடுவதற்குரியது.

வாக்குச்சீட்டு எண்ணும் முறை

வாக்குகள் அனைத்தும் ஊசியின் மூலம் ஒரு நூலில் கோர்த்து ஒரு முடிச்சு போட்டு அவை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். வாக்குகளைச் சரிபார்த்து எண்ணுவதற்கு அங்குள்ள கர்தினால்களே ஒவ்வொரு முறையும் சீட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர், மூன்றில் இரண்டு பகுதி வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்கைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வரைமுறையானது, 1179-ஆம் ஆண்டு, திருத்தந்தை மூன்றாம் அலெக்சான்டரால் கொண்டுவரப்பட்டது. இத்தேர்தலில், மூன்றில் இரண்டு பகுதி வாக்குகள் முழு எண்மத்தைப் பெறாதபோது, அவற்றோடு ஒரு வாக்கு அதிகமாகப் பெற வேண்டும் என்ற வரைமுறையை, 1996ஆம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பில் வெளியிட்டுள்ளார். அதன்படி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க இருக்கும் கர்தினால்கள் 135 பேரில் இரண்டு பங்கு (45+45+1=91) 91 வாக்குகள் தற்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவருக்கு தேவை.

வெண்புகை வெளியிடுவது 

திருத்தந்தையின் தேர்தல் நிலவரம் குறித்து பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் புகைபோக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் கருப்புப் புகையும், தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் வெண்புகையும் வெளியே வரும். வெண்புகை வெளியே வரும்போது வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். வெண்புகை வெளியே வருவது ஏறக்குறைய 45 நிமிடங்கள் நீடிக்கும். இந்தப் புகைகள் வெளிவருவதற்கு வாக்குச்சீட்டுகளுடன் வேதியப் பொருள்களும் சேர்த்து எரிக்கப்படும். வெண்புகையை வெளியிடும் வழக்கம் 1903-ஆம் ஆண்டிலிருந்து திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தலானது ஒவ்வொரு நாளும் காலையில் 2, மாலையில் 2 என முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும். அதுவரை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் செபம் மற்றும் தியானத்திற்கென ஒருநாள் விடப்படும். பின்னர் அடுத்த நாள் வாக்கெடுப்புத் தொடங்கும். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை தினமும் பகல் 12 மணியளவிலும், மாலை 7 மணியளவிலும் புகை வெளியிடப்படும்.

திருஅவையை வழிநடத்த இருக்கும் திருத்தந்தையைத் தேர்வு செய்வதற்கான இந்த தேர்தல் அரசியல் தேர்தல் போன்றதன்று. தூய ஆவியின் அருளையும் ஆற்றலையும் நிறைவாகப்பெற்று அந்த ஆவியின் துணையுடன் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க கர்தினால்கள் ஒவ்வொருவரும் செயல்பட அவர்களுக்காக செபிப்போம். இத்தேர்தலுக்காக உலகெங்கும் தொடர் செபங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் நாமும் நமது செபங்களை ஏறெடுப்போம்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 12:04