உரோம் நகர மக்கள் அனைவருக்கும் நன்றி - கர்தினால் ரே
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியின்போது உலகெங்கிலும் இருந்து வந்திருந்த மக்களுக்கு பாதுகாப்பும், சிறந்த போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து உதவிய உரோம் நகர தன்னார்வலர்கள் மற்றும் அமைப்பு சார் நிறுவனங்களுக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே.
அண்மையில் இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத்திருப்பலி நிகழ்வுகள் மற்றும் மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கச்சடங்கு ஆகியவை நடைபெற்றபோது அதற்குப் பெரிதும் உதவிய உரோம் நகர காவலர்கள் பாதுகாப்புப் பணியாளர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், தனியார் மற்றும் பொது நிறுவன அமைப்பு சார்ந்தவர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரோம் நகர மேயர் Gualtieri அவர்களுக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்த போதும், அவர் இறைபதம் அடைந்து அடக்கத்திருப்பலியானது வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்றபோதும் ஏராளமான மக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து அவருக்கு தங்களது செபத்தையும் உடனிருப்பையும் வெளிப்படுத்தி வந்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் ரே.
உரோம் நகரத்தார் முழுவதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேல் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த் இச்செயலுக்கு நன்றி தெரிவித்துள்ள கர்தினால் ரே அவர்கள் தனது நன்றி உணர்வின் வெளிப்பாட்டினை முழு நகர சமூகத்திற்கும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்