திருத்தலங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் புதிய நூல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) திருஅவைச் சட்டத்திற்கான ஆணையம், குறிப்பிடத்தக்க மறைமாவட்டத் திருத்தலங்களை தேசியத் திருத்தலங்களாக அங்கீகரிப்பதற்கான தெளிவான வழிமுறைகளை புதிய நூல் ஒன்றில் வழங்கியுள்ளதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள புனித யோவான் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 94-வது செயற்குழுக் கூட்டத்தில், “தேசியத் திருத்தலங்களாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகள்” என்ற தலைப்பில் இதுவொரு அதிகாரப்பூர்வமான நூலாக வெளியிடப்பட்டதாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நூலில் விளக்கப்பட்டுள்ள விரிவான நெறிமுறைகள், மறைமாவட்டத் திருத்தலங்களைத் தேசிய தகுதி நிலைக்கு உயர்த்துவதற்கும், அதிக அங்கீகாரம் மற்றும் திருப்பயணத்திற்குரிய வாய்ப்புகளை வளர்ப்பதற்கும் பல ஆயர்கள் வெளிப்படுத்திய விருப்பத்தை நிவர்த்தி செய்கின்றன என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இந்திய கத்தோலிக்க (இலத்தீன்) ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் கர்தினால் பிலிப் நேரி ஃபெர்ராவோ அவர்களால் மே 7, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட இந்நூல், திருஅவைச் சட்டத்திற்கான ஆணையத்தின் தலைவர் முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து மற்றும் ஆணைக் குழுவின் நிர்வாகச் செயலாளரும், தூய பேதுரு பாப்பிறை குருமடத்திலுள்ள திருஅவைச் சட்டப் பேராசிரியருமான முனைவர் மெர்லின் ரெஞ்சித் ஆம்புரோஸ் ஆகியோரின் வழிநடத்துதலில் ஒரு நுட்பமான செயல்முறையின் வடிவத்தைப் பிரதிபலிக்கிறது என்று செய்திக்குறிப்பு உரைக்கிறது.
இந்த நூலிலுள்ள ஆவணம் ஐந்து தனித்தனி பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தலங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு, முதல் பகுதி தேசியத் திருத்தலங்களை நிர்வகிக்கும் மேலோட்டமான வழிகாட்டும் கொள்கைகளை வழங்குகிறது என்றும், இரண்டாவது பகுதி வழிபாடுகள், அருளடையாளங்கள், திருச்சடங்குகள், திருப்பயணங்கள், பிறரன்பு பணிகளுக்கான பெருமுயற்சிகள், கிறிஸ்தவ ஒன்றிப்புசார் கொண்டாட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற பக்திமுயற்சிகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை ஆராய்கிறது என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது பிரிவு மேலும் கூடுதல் வழிகாட்டுதல்கள் குறித்து விவரிப்பதாகவும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையிடமிருந்து "தேசியத் திருத்தலம்" என்ற தகுதியைப் பெறுவதற்கான நடைமுறையை நான்காவது பிரிவு கோடிட்டுக் காட்டுகிறது என்றும், இறுதியாக, ஐந்தாவது பிரிவு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறையை விவரிக்கிறது என்றும் அச்செய்திக் குறிப்பு விவரிக்கின்றது. (CCBI)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்