தடம் தந்த தகைமை - இவரே உம் தாய்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இயேசு தன் சீடர் யோவானிடம், அன்னை மரியாவைக் காட்டி “இவரே உம் தாய்" (யோவா 19:27) என்று மொழிந்தார்.
உயிர் பிரியும் வேளையிலும் உறவுக்கு உயிரூட்டியவர் இயேசு. மரண வலியிலும் தம் தாய் மரியாவின் உடனிருப்பால் வலிமை பெற்றார். தந்தையாம் கடவுளுக்கு உகந்த ஒரு மகனாக விளங்கியதைப் போலவே தம் தாயாம் மரியாவுக்கும் பணிந்த மகனாக வாழ்ந்தார். தம் சமூக அடிமைத்தனங்களைத் தாயுடன் உரையாடினார். அவரோடு திட்டங்கள் பல வகுத்திருப்பார். தாயுடன் கொண்ட தம் பாச உணர்வுகளை முழுநேரப் பணியாளர் ஆகும்வரை உழைப்பாலும் உடனிருப்பாலும் அள்ளி வழங்கியிருப்பார். அந்தத் தாய் தம் இறப்பால் தனித்து விடப்படுவதை முன்னுணர்ந்தே தம் அன்புச் சீடரிடம் அர்ப்பணிக்கின்றார். இந்த அர்ப்பணித்தலின் வழியாக இயேசு இத்தரணி வாழும் நம் எல்லாரையும் தம் தாயிடம் ஒப்புவித்தார்.
முதுமை, ஏழ்மை, உடல் - மன நலமின்மையைக் காரணம் காட்டித் தனிமைப்படுத்தி, காப்பகங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தள்ளப்படும் தாய் தந்தையரை எண்ணிப் பார்க்க வேண்டிய காலம் இது. 'என்னை நாயினும் கீழாக நடத்தும் என் தனயன் நலமே நீடூழி வாழ வேண்டும்' என மனதார வேண்டும் தாயின் அன்பிற்கு இணை உலகில் வேறேதும் உண்டோ? அன்னை மரியாவைத் தாயாக ஏற்காதவர் இயேசுவைச் சகோதரராக ஏற்காதவரே.
இறைவா! தனித்தும் ஆதரவற்றும் வாழ்வோரைத் தாங்கும் கரங்களை எனக்கு வரமாய்த் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்