அடைக்கலமும் மறுவாழ்வும் தரும் அமானி சிறார் குடும்பப் பள்ளி
மெரினா ராஜ் - வத்திக்கான்
தெருவோரச் சிறாருக்கு அடைக்கலமும், வாழ்க்கை மாற்றமும் தரும் இடமாக அமானி சிறார் குடும்பப் பள்ளி திகழ்கின்றது என்றும், கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை சமூகத்தில் மீண்டும் இணைப்பதற்கான பணிகளையும் செய்து வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி தமியானா.
கென்யாவின் நைரோபி பகுதியில் இயங்கி வரும் இப்பள்ளியானது 1983-ஆம் ஆண்டு இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் மறைப்பணியாளர்கள் சபையினரால் தொடங்கப்பட்டது. தெருவோரங்களில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறார், உணவு, உடை, தங்குமிடம் இல்லாமல் வாழும் நிலை கண்டு அவர்களது துன்ப துயரைத் துடைக்க இப்பள்ளியை உருவாக்க்கினார் அருள்சகோதரி தமியானா.
அமானி சிறார் குடும்ப தொடக்கப்பள்ளி, பல தெருக்வோரச் சிறாருக்கு ஓர் இல்லமாக மாறியுள்ளது, 'சோகோரா' என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படும் இப்பள்ளியானது வறுமையால் வாடும் வீடற்ற இளைஞர்களை ஆதரித்து வாழ்வளிக்கின்றது.
இத்தகைய சிறார் மேல் கொண்ட இரக்கத்தினால் தூண்டப்பட்டவராக நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு வழங்கும் திட்டத்தினை உருவாக்கிய சகோதரி தமியானா அவர்கள், நாளடைவில் அவர்களுக்கு கல்வியையும் வழங்க வேண்டும் என்ற உணர்வினால் உந்தித்தள்ளப்பட்டு இப்பள்ளியினை தனது சபையின் ஆதரவுடன் ஆரம்பித்தார்.
தெருக்களில் வாழும் குழந்தைகளுக்கு வெறும் உணவு மட்டும் போதாது அவர்களது வாழ்க்கை வளமாகவும், நம்பிக்கையில் ஆழப்படவும், கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அமானி சிறார் குடும்பப்பள்ளியினை ஆரம்பித்தார் சகோதரி தமியானா.
தொடக்கத்தில் தரையையே தங்களது பலகையாக மாற்றி கல்வி கற்பிக்க ஆரம்பித்த சகோதரிகள் நாளடைவில் பலரின் தொண்டுப்பணியால் புத்தகங்களையும் எழுதுகோல்களையும் இலவசமாகப் பெற்றனர்.
வறுமை, வீட்டு வன்முறை, குடிப்பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறார் பல்வேறு துயரமான கதைகளை தங்களது உள்ளத்தில் சுமந்தவர்களாய் வரும் மக்களின் உள்ளத்து உணர்வை மாற்றி அவர்களது தனிப்பட்ட வளர்ச்சியில் அக்கறையையும், சமூகத்தில் சிறந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் இப்பள்ளியில் கற்பிக்கின்றார்கள்.
பல ஆண்டுகளாக சிறப்புடன் திகழ்ந்து வரும் அமானி சிறார் குடும்ப தொடக்கப்பள்ளியானது இதுவரை ஆசிரியர், வழக்கறிஞர், கட்டிடக் கலைஞர், மருந்தகர்களை உருவாக்கியுள்ளது. மேலும் நைரோபி பல்கலைக்கழகத்தில் தற்போது ஒரு மருத்துவத்துறையில் மாணவர் ஒருவர் பயின்று கொண்டிருக்கின்றார்.
அமானி சிறார் பள்ளியானது திறமைகளை வளர்க்கிறது, ஆன்மிக மதிப்புகளை வளர்க்கிறது, இசை, நடனம் போன்ற பயிற்சிகள் பெறுபவர்களில் சிலருக்கு உதவித்தொகையினையும், வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான கதவுகளையும் திறந்துள்ளது. நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், உறுதியுள்ள மற்றும் மாண்புள்ள எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்