எருசலேம் புனித கல்லறைப் பேராலயத்தில் திருத்தந்தைக்குத் திருப்பலி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 23, இப்புதன்கிழமை, எருசலேமில் உள்ள புனித கல்லறைப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாறுதல் அடைய எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa அவர்களின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சிறப்புத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் ஏராளமான ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால திருஅவைப் பணியில் அவரது பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பண வாழ்வை பெருமைப்படுத்தினர்.
குறிப்பாக, காசா போன்ற மோதல் பகுதிகளில் துன்பப்படுபவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த ஆதரவு, அக்கறை, இரக்கம், அமைதி மற்றும் நம்பிக்கை பற்றிய அவரது அசைக்க முடியாத செய்தியையும், தனது மறையுரையில் பகிர்ந்துகொண்டார் அருள்பணியாளர் Francesco Patton.
மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிவையும், தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளிடம் தொடர்ந்து அவர் எழுப்பிய விருப்பத்தையும் தனது மறையுரையில் கோடிட்டுக்காட்டினார்.
கர்தினால் Pizzaballa அவர்களின் தலைமையில் நிகழ்ந்த இந்தத் திருப்பலி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. மேலும் இதில் பங்கேற்ற பலர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மிக மரபுக்கு (legacy) தங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.
இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றத்தைத் தூண்டிய, வலுவற்றவர்களை அரவணைத்த, அன்பு மற்றும் சேவை வாழ்க்கைக்கு திருஅவையை அழைத்த ஓர் அன்புத் தந்தையாக நினைவுகூரப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில், கிறிஸ்துவின் அடையாளப்பூர்வமான காலியான கல்லறைக்கு முன்பாக, எருசலேம் தலத்திருஅவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை மற்றும் தலைமைக்கான தனது ஆழ்ந்த பாராட்டுக்களை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்