தேடுதல்

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எளிமையான கல்லறை மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எளிமையான கல்லறை  

விவிலியத்தேடல் - மரணம் தரும் புதுவாழ்வு

மரணம்! நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும். இதுதான் வாழ்வின் நியதி. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்ற கருத்துக்கள் ஒவ்வொரு மரணத்தின் போது சொல்லப்பட்டாலும் இறப்புகள் என்னவோ நம் மனதை பெரிதும் பாதிக்கவே செய்கின்றன.
விவிலியத்தேடல் - மரணம் தரும் புதுவாழ்வு

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

அன்பர்களே, சாவை வென்று மகிமையோடும் வல்லமையோடும் வெற்றிவீரராக உயிர்த்தெழுந்த நமது ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவினை அனைத்துலகளவில் கிறிஸ்தவ மக்கள் பெரும் அக்களிப்போடு கொண்டாடி வருகின்றனர். இவ்வேளையில், நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறப்பு நம் அனைவரின் நெஞ்சங்களையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்றாலும், இயேசுவைப்போல நமது திருத்தந்தை அவர்களும் சாவை வென்று என்றும் அழியாத நிலைவாழ்விற்குள் சென்றிருப்பார் என்பது நமது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கின்றது. இன்றைய நாளிலே நமது விவிலியத் தேடலில் இறப்பு மற்றும் உயிர்ப்பு தரும் புதுவாழ்வு குறித்து சிந்திப்போம்.

மரணம்! நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும். இதுதான் வாழ்வின் நியதி. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்ற கருத்துக்கள் ஒவ்வொரு மரணத்தின் போது சொல்லப்பட்டாலும் இறப்புகள் என்னவோ நம் மனதை பெரிதும் பாதிக்கவே செய்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் இல்லாவிட்டால் இயக்கமே இல்லை. மரணம் என்பதும் மாற்றத்தின் ஒரு அம்சமே. இந்தப் பூமி இயங்கிக்கொண்டே இருக்க வேண்டுமானால் அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் ஆகவே, பிறந்த எல்லாமே ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது, இதன் காரணமாகவே, "பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்; பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்; புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்" என்கின்றார் பட்டினத்தார். ஆக, நிலை இல்லாத இவ்வுலகில், கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள பிறப்பு என்பது மிக உயரிய கொடை. அப்படியென்றால், கடவுள் அளித்துள்ள இந்த வாழ்வை நாம் அர்த்தமுள்ள வழியில் வாழ வேண்டும். அர்த்தமுள்ள வழியில் என்று சொல்லும்போது, நமக்காக மட்டுமன்றி பிறரது நலன்களுக்காகவும் வாழ வேண்டும் என்று அர்த்தம் பெருகிறது. இயேசுவின் தூய்மைமிகு பாடுகளும், மரணமும், உயிர்ப்பும் எப்படி பிறருக்காக வாழ்வை இழப்பது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

“மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” (காண்க. மாற் 9 : 31) என்கிறார் இயேசு. இங்கே உயிர்ப்பு என்பது வேள்வித்தீயில் தியாகம் மரணம் ஏற்பதற்கான பரிசாக அமைகின்றது. "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்" (காண்க. பிலி 3:8-11) என்கின்றார் புனித பவுலடியார்.

இறைபதம் அடைந்துள்ள நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறித்து, கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், உலகத் தலைவர்கள் மட்டுமன்றி, மதம் கடந்து பலரும் அவரது நல்வாழ்விற்கு நற்சான்று வழங்கிவருவதைக் காண முடிகிறது. குறிப்பாக, உலக மக்கள் அனைவருக்குமான அவரது அன்பு, அதிலும் சிறப்பாக, புலம்பெயர்ந்தோர் மற்றும், இடம்பெயர்ந்தோர்மீதான அவரது தனிப்பட்ட கரிசனை, யுத்தமில்லா உலகம், நீடித்த நிலையான அமைதி, மதங்களைக் கடந்த மனிதநேயம், உடன்பிறந்த உணர்வு, எதையும் நேர்பட பேசுவது, நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிமீது அக்கறை ஆகியவை அவர் வாழ்ந்து சென்றுள்ள உன்னதமான வாழ்விற்குச் சான்றுகளாக அமைகின்றன. இயேசுவின் உயிர்ப்பு மூன்று முக்கியமான செய்திகளை முன்னிறுத்துகின்றன. முதலாவது, இந்த உலகில் தீமை ஒருபோதும் வெற்றி பெறாது, நன்மைதான் வெற்றிபெறும், அதாவது, சாவல்ல வாழ்வே வெற்றிபெறும் என்பதாகும். இரண்டாவது செய்தி, கலங்கவேண்டாம், அஞ்சவேண்டாம், நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்பதாகும். மூன்றாவது செய்தி, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை, நாம் எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதாகும். இம்மூன்றையும் மனதில் நிறுத்தி அதன்படி வாழ்ந்தவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ். தீமையை எதிர்த்து, தனது விசுவாசத்தைக் காத்துக்கொள்வதில் எப்போதும் உறுதியாக இருந்தார் அவர். இதற்கான போராட்டத்தில் அவர் வெற்றியும் பெற்றார் என்று நாம் மிகவும் உறுதியாக நம்பலாம். "நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்" (காண்க 1 திமோ 4: 7-8) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்வுடன் மிகவும் பொருந்திப்போகின்றது.

ஒரு ஜென் குருவிடம் சீடனாக சேர ஒருவன் வந்தான். குரு அவனை சேர்த்துக் கொள்ள மறுத்தார். அவன் சொன்னான் நீங்கள் சொன்னால் எதை வேண்டுமானாலும் செய்கிறேன். அப்படியா அருகில் ஒரு மூங்கில் காடு இருக்கிறது. அங்கே போய்  மூங்கிலோடு மூங்கிலாக இருந்து தவம் செய் என்றார் குரு. சீடன் போய் பல நாட்களாகி விட்டன. அவன் திரும்பி வரவே இல்லை. ஒன்று அவன் ஓடிப்போயிருக்க வேண்டும். அல்லது மூங்கில் காட்டில் பாம்பு கடித்து இறந்துவிட்டிருக்க வேண்டும். குருவுக்கு கவலை வந்து விட்டது. தள்ளாத உடலையும் தாங்கிக் கொண்டு தனது கைத்தடியை எடுத்துக் கொண்டு மெதுவாக அவர் மூங்கில் காட்டைநோக்கி நடந்தார். மூங்கில் காட்டில் ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் இருந்தன. ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தபடி குரு நகர்ந்தார். அப்போது அங்கே அந்த சீடன்  மூங்கில்களுக்கு மத்தியில் தானும் ஒரு மூங்கிலைப் போல் நின்றுக் கொண்டிருந்தான். காற்று வீசும் போது மூங்கில்கள் அசைந்தன. அவனும் மூங்கிலைப் போல் வளைந்து அசைந்தான். காற்று இல்லாத போது மூங்கில்கள் அசையாமல் நின்றன. அவனும் அசையாமல் நின்றான். குரு அவனைத் தட்டி எழுப்பினார். அவன் தவத்தில் இருந்து மீண்டான். என்ன  இது என்று கேட்டார் குரு. ஒரு மூங்கிலின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வாழ்ந்துப் பார்த்தேன் என்றான் சீடன். குரு அவனை ஆசீர்வதித்தார். ஞானம் அடைந்த அச்சீடன் அன்றுமுதல் அவரது உண்மைச் சீடரானான். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏழைகள், துயருற்றோர், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோரின் வாழ்வை நன்கு புரிந்துகொண்டவர். அவர்கள்மீது பரிவிரக்கம் கொண்டவர், அவர்களுடன் தனது உடனிருப்பை வெளிபடுத்தியவர்.

இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபையைச் சேர்ந்த ஒரு துறவி. புனித இனிகோவின் வழியொற்றி வாழ்ந்தவர். குறிப்பாக, அவரது ஆன்மிகப் பயிற்சிகளை அக்கறையுடன் கடைபிடித்தவர். ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகளையும் முழுமையாகக் கடைபிடித்து வாழ்ந்தவர். அதிலும் சிறப்பாக ஏழ்மையை அதிகம் விரும்பியவர். அதனால்தான் அவர் திருத்தந்தையின் தலைமைப் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டதும், யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயரைத் தனதாக்கிகொண்டார். அவர் பெயரைத் தாங்கிய முதல் திருத்தந்தையானார். மேலும் இறுதிவரை அவர் இயேசு சபைக்கும், திருஅவைக்கும் உண்மையுள்ள ஊழியனாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

இயேசுவின் அன்னையாம் கன்னி மரியாவின் மீது மிகுந்த பக்திகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இறப்பிற்குப் பின்பு உரோமையிலுள்ள மேரி மேஜர் பெருங்கோவிலில் தான் தன்னை நல்லடக்கம் செய்யவேண்டும் என்றும் உயில் எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி, தனது அடக்கச் சடங்குகள் மிகவும் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பாக, தான் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தரையில் இருக்க வேண்டும், எவ்வித அலங்காரமும் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும், அதில் பிரான்சிஸ்குஸ் (Franciscus) என்ற பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்க  வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார். மேலும் "என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும் ஆயராகவும், எனது பணியின்போது, ​​நான் எப்போதும் என்னை நம் ஆண்டவரின் தாயாம் அன்னை கன்னி மரியாளிடம் ஒப்படைத்தேன்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அன்னையின் பரிந்துரையின்பேரில் எண்ணற்ற புனிதர்களோடு நிலைவாழ்வை தனது உரிமைப்பேறாகப் பெற்றுள்ள நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணகப் பேரின்ப வீட்டில் தாவீது அரசர் திருப்பாடல் 23-இல் பாடிய வார்த்தைகளைப் பாடி மூவொரு கடவுளைப் போற்றிப் புகழ்வார் என்பது திண்ணம். இப்போது அந்த வார்த்தைகளை நாமும் பாடி இன்றைய நாள் விவிலியத் தேடல் நிகழ்வை நிறைவு செய்வோம்.

"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" (திபா 23:1-6)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஏப்ரல் 2025, 10:26