மனித மாண்பையும், நம்பிக்கையையும் வழங்கி வரும் அருள்சகோதரிகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நம்மைச் சுற்றியுள்ள மக்களின் ஆன்மிக மற்றும் மனித தேவைகளுக்கு செவிசாய்க்காமல், அவர்களுக்குப் பதிலளிக்காமல் கடவுளின் அரசை நாம் அறிவிக்க முடியாது என்றும், சூரிய மின்னாற்றலைப் பெற வழி செய்வதன் வழியாக மக்களின் மாண்பு, மரியாதை மட்டுமல்லாது எல்லாருக்கும் இயேசுவின் எல்லையற்ற அன்பையும் வழங்கி வருவதாக எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி Bernadette Mnyenyembe, MSHR.
மலாவியின் கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லாம வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சூரிய மின்னாற்றலால் ஒளியையும் நம்பிக்கையையும் தந்து ஏறக்குறைய 9,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒளியையும் சிறந்த வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவது பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு பகிர்ந்துள்ளார் அருள்சகோதரி Bernadette Mnyenyembe, MSHR.
திருச்செபமாலை அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்த சகோதரி பெர்னதெத் அவர்கள், மலாவி பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதன் வழியாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்றும், மின்சாரமின்றி தங்களது இயல்பு வாழ்க்கையை சூரியன் மறைவதற்குள் முடித்துக்கொண்ட மக்கள் தற்போது சூரிய மின்னாற்றலால் கிடைக்கும் ஒளியில் தங்களது வாழ்வை முன்னேற்றியுள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஏறக்குறைய 15 அருள்சகோதரிகள் இணைந்து இந்த பயனுள்ள வாய்ப்பை மக்களுக்கு வழங்கி வருவதாகவும், தொழில்முன்னேற்றங்கள், விவசாயத்தில் புதிய பல நடவடிக்கைகள் போன்ற பல்வேறு புதிய வாய்ப்புக்கள் வழியாக மக்களுக்கு நம்பிக்கையை விதைத்து முன்னேற ஊக்கமளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி பெர்னதெத்.
வறுமையில் வாழும் மக்களின் துயரைப் போக்குவதைத் தங்களது நோக்கமாகக் கொண்டு தொடக்கத்தில் பணியாற்றிய அருள்சகோதரிகள் நாளடைவில் அவர்களது நிலைமை உயர்வதற்கான தடைகளை உடைக்க பாடுபட்டனர் என்றும், மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதலையும், துயரம் என்னும் தடைகளை உடைத்து நடைமுறை வாழ்க்கைக்கான தீர்வுகளையும் தற்போது வழங்கி வருவதாக எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரி பெர்னதெத்.
ஏழை மக்களுக்குக் கல்வி கற்பித்தல், இறையரசை அறிவித்தல், நலவாழ்வுப் பணிகளை வழங்குதல், சமூகப்பணிகள் செய்தல் போன்றவற்றின் வழியாக மக்களுக்கு உதவி வருவதாகவும், ஏழைகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் பணியாற்ற கடவுள் மின்னாற்றல் வழியாக தனது அன்பை எடுத்துரைத்து வருவதை உணர்வதாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார் அருள்சகோதரி பெர்னதெத்.
மின்னியங்கி விளக்குகள், மெழுகுதிரிகள், பிற ஒளியூட்டும் விளக்குகள் வாங்குதல் போன்ற பிற செலவீனக்கள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளனர் என்றும், கல்வியின் வழியாக மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி பெர்னதெத்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்