தேடுதல்

இயேசுவின் போதனை இயேசுவின் போதனை 

தடம் தந்த தகைமை - எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக

சாதி - சமய - நிற - மொழி - பால் - வர்க்க - திறன் என பல மட்டங்களில் மனிதரைப் பிரித்து முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் இறைமையைக் கூறுபோடுதலாகும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! (யோவா 17:21) என இறைத்தந்தையிடம் மன்றாடினார் இயேசு.

எல்லாரும் ஒன்றாக வேண்டும்; என்பது இயேசுவின் இதயத்திலிருந்த இலட்சியக் கனவு. உரோமை ஆளும் வர்க்கத்தால், யூத சமயத்தலைவர்களால், சட்டக் காவலர்களால், எசேனியர்களால், பல தீவிரவாதக் குழுக்களால் இயேசு கால சமூகம் பிளவுபட்டுக் கிடந்தது. ஒருவிதத்தில் அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்கள் பன்முனைத் தாக்குதலுக்கு ஆட்பட்டிருந்தனர். அவர்களின் ஏக்க விழிகளில் விடுதலை வேட்கை கனலாய் இருந்தது. ஏழையரின் தாகத்திற்கு ஒரு சமப்படுத்தல் தேவை என உணர்ந்தே இயேசு இவ்வாறு வேண்டினார்.

ஒன்றுபடுத்தல் என்பது சாதாரணமான பணியன்று. அப்பணியில் அன்னை மரியா சொன்னது போல வலியோர் தாழ்வதும், தாழ்ந்தோர் உயர்வதும் (லூக் 1:52) நிகழ வேண்டும். அந்தச் சமப்படுத்தலில் தடைகள் பல எழும். இழப்புகள் பல நிகழும். எனினும் துணிவோடு உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைத் தனது வேண்டுதல் வழியாக முன்வைக்கிறார் இயேசு. இன்றும் சாதி - சமய - நிற - மொழி - பால் - வர்க்க - திறன் என பல மட்டங்களில் மனிதரைப் பிரித்து முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் இறைமையைக் கூறுபோடுதலாகும். இச்சமூகத்தைச் சமப்படுத்தல் நம் முன்பாக உள்ள மாபெரும் சவால். ஆடுகளின் ஒற்றுமை சிங்கத்தைப் பசியோடு படுக்கச் செய்யும்.

இறைவா! மானுடம் ஒன்றிக்க என்னை முழுமையாக அர்ப்பணிக்கும் தியாக மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மே 2025, 13:05