திருத்தந்தையின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய கர்தினால்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏப்ரல் 21, திங்களன்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 26 சனிக்கிழமை உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27, ஞாயிறு மாலை அவரது கல்லறையைச் சந்தித்து கர்தினால்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஏப்ரல் 27, ஞாயிறு உரோம் உள்ளூர் நேரம் மாலை 4 மணியளவில் இந்திய இலங்கை நேரம் மாலை 7.30 மணியளவில் ஏறக்குறைய 20,000 மக்கள் பெருங்கோவிலிற்குச் சென்று திருத்தந்தையின் கல்லறையைச் சந்திப்பதற்காகக் காத்திருக்க, கர்தினால்கள் அனைவரும் மேரி மேஜர் பெருங்கோவிலில் நடைபெற்ற ஞாயிறு மாலைப்புகழ் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
ஏறக்குறைய 110 கர்தினால்கள் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்திலிருந்து தனிவாகனத்தில் புறப்பட்டு மேரி மேஜர் பெருங்கோவிலை வந்தடைந்தனர். இருவர் இருவராக திருத்தந்தையின் கல்லறை முன் நின்று செபித்து வணங்கினர். அதன்பின் திருத்தந்தைக்கு மிகவும் பிடித்தமான அன்னை மரியா திருவுருவத்தின் முன் நின்று செபித்தனர்.
தனது 12 ஆண்டு கால தலைமைத்துவக் காலத்தில் ஏறக்குறைய 126 முறை மேரி மேஜர் பெருங்கோவில் வந்து அன்னையைச் சந்தித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று அந்த அன்னையின் ஆலயத்திலேயே இளைப்பாறும் அவரைச் சந்தித்து தங்களது அஞ்சலியினைச் செலுத்தினர் கர்தினால்கள்.
மாலைப்புகழ் வழிபாட்டிற்கு தலைமையேற்ற கர்தினால் Rolandas Makrickas அவர்கள், "உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, மறைந்த திருத்தந்தை அவர்களை உயிர்ப்பின் ஒளி மற்றும் அமைதியின் வாசலுக்கு வரவேற்கட்டும்” என்று கூறி செபித்தார். திருப்பாடல்கள் பல்வேறு மொழிகளில் பாடபட்டன.
ஏறக்குறைய 30 மணி நேரத்திற்குப் பின்னர் கர்தினால்களின் மாலைப்புகழ் வழிபாடானது நிறைவுற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறையை மக்கள் சந்திப்பதற்காக மேரி மேஜர் பெருங்கோவிலானது ஏப்ரல் 27, ஞாயிறு இரவு 10 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்