திருத்தந்தை பிரான்சிஸின் பணி மையக்கருத்தாக கருணை இருந்தது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியா மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தது குறித்தும், அவரின் பாப்பிறைப் பணியின் மையக்கருத்தாக கருணை என்பதே இருந்தது என்றும் எடுத்துரைத்தார், ஆயர் குய்தோ மரினி.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான துறையின் தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி தற்போது இத்தாலியின் தொர்த்தோனா மறைமாவட்டத்தின் ஆயராக செயல்படும் ஆயர் மரினி அவர்கள் வழங்கிய திருப்பலி மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விசுவாசம் மற்றும் மனிதாபிமானம் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள Salus Populi Romani அன்னை மரியா திரு உருவப்படத்தின் மீது திருத்தந்தை கொண்டிருந்த பக்தி அனைவரும் அறிந்ததே என்ற ஆயர், பாத்திமா அன்னையின் திருவுருவச்சிலை வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவர் காட்டிய ஆர்வம் அளவிடமுடியாதது என உரைத்தார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை தன் முதல் தவக்காலத்தின்போது, மக்களுக்கு ஒப்புரவு அருள்சாதனத்தை வழங்கச் சென்ற வழியில் திடீரென தானே ஒரு அருள்பணியாளரின் முன் முழந்தாள்படியிட்டு ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்றதையும் குறிப்பிட்டார் ஆயர் மரினி.
ஏழைகள் மீது அதிக அன்பு கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளைச் சந்தித்து அவர்கள் சென்றபின், அவர்களின் நிலை குறித்து அழுததை தானே பார்த்துள்ளதாகவும் எடுத்துரைத்த ஆயர், சிறைக் கைதிகள் குறித்தும் அவர் சிறப்பு அக்கறைக் கொண்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.
அமைதிக்கான திருத்தந்தையின் அர்ப்பணம், மற்றும், சீர்திருத்தங்களைக் கொணர்வதில் உறுதியுடனும், சுதந்திரத்துடனும் செயல்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார் ஆயர் மரினி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்