புதிய உலகை உருவாக்கும் இரக்கம் – கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இரக்கம் நம்மை மீண்டும் நம்பிக்கையின் இதயத்திற்குக் கொண்டுவருகிறது என்றும், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவை நிறைந்த இக்கால கட்டத்தில் என்றும் வாழ்கின்ற உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் முகத்தைக் கொண்ட உண்மையான எதிர்நோக்குடன் இளையோர் தங்களது வாழ்க்கையை வாழ ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை இறை இரக்க ஞாயிறு மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான இரண்டாவது நாள் திருப்பலி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
சீடர்களின் கலக்கம்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு தாங்கள் பின்தொடர்ந்த தலைவரும் மேய்ப்பருமான இயேசு, சிலுவையில் அறையப்பட்டதால் கலங்கிய மனநிலை கொண்ட சீடர்களின் இதயங்கள், சோகத்தில் ஆழ்ந்திருந்தன. அனாதையாகவும், தனிமையாகவும், தொலைந்து போனதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும், உதவியற்றவராகவும் உணர்ந்த சீடரகளின் மனநிலை கொண்டவர்களாக நாம் அனைவரும், திருஅவையும், முழு உலகமும் இருக்கின்றது என்று கூறினார் கர்தினால் பரோலின்.
அன்று இயேசுவை இழந்து சீடர்கள் வருந்தியது போல திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இழந்து நாம் அனைவரும் வருந்துகின்றோம் என்றும், இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில் தான், இயேசு உயிர்ப்பின் ஒளியாக நம்மில் வந்து நம் இதயங்களை ஒளிரச் செய்கின்றார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
இயேசுவுடனான சந்திப்பு
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய கருத்துக்களான, “இயேசுவைச் சந்திக்கும் மனிதரின் வாழ்க்கையும் இதயமும் நிறைவடைகின்றது, அவரால் மீட்கப்பட தங்களையேக் கையளிப்பவர்கள் பாவம், வருத்தம், உள்மன வெறுமை, தனிமை ஆகியவைகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர், இயேசுவில் எப்போதும் மகிழ்வானது பிறக்கின்றது, மறுபிறப்பெடுக்கின்றது” என்பதைச் சுட்டிக்காட்டினார் கர்தினால் பரோலின்.
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவை நிறைந்த இக்கால கட்டத்தில் என்றும் வாழ்கின்ற மற்றும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் முகத்தைக் கொண்ட உண்மையான எதிர்நோக்குடன் இளையோர் தங்களது வாழ்க்கையை வளர்க்க ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும், நாம் வாழும் இடத்தில் நம்மைச் சந்தித்து, வாழ்வதற்கான துணிவையும், தாராள மனதையும் உயிர்த்த இயேசு நமக்கு தருகின்றார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
துணிவைத் தரும் இயேசு
நமது அனுபவங்கள், எண்ணங்கள், கொடைகள், கனவுகள் போன்றவற்றைப் பகிர்வதற்கான துணிவையும், நமது அருகிலும் தொலைவிலும் இருப்பவர்களை அன்புடன் பார்க்கவும், தாராள மனமுள்ளவர்களாக பிறருக்கு உதவும் மனதையும் நமக்கு உயிர்த்த இயேசு தருகின்றார் என்று எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.
இரக்கம் நம்மை மீண்டும் நம்பிக்கையின் இதயத்திற்குக் கொண்டுவருகிறது என்றும், கடவுளுடனான நமது உறவையும், திருஅவையாக இருப்பதையும் மனித அல்லது உலக வகைகளின்படி விளக்கக்கூடாது என்பதை இறை இரக்கம் நமக்கு நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.
இரக்கமும் மென்மையும் நிறைந்த இதயம் கொண்ட கடவுளால் நாம் அன்பு செய்யப்படுகின்றோம் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், நமது வாழ்க்கை இரக்கத்தால் நிறைந்துள்ளது, ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னரும் நாம் எழுந்து எல்லையற்ற விதத்தில் நம்மை மன்னிக்கும் கடவுளால் அன்பு செய்யப்படுகின்றோம் என்ற எண்ணத்துடன் நமது எதிர்காலத்தைக் காண வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மற்றவர்களைத் தீர்ப்பிடாது, உரையாடல் வழியில் அனைவரையும் அன்பு செய்து மன்னித்து வாழ வேண்டும் என்றும், இரக்கம் ஒன்று மட்டுமே ஒரு புதிய உலகத்தை உருவாக்குகின்றது, அவநம்பிக்கை வெறுப்பு, மற்றும் வன்முறையின் நெருப்பை அணைக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்