தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதித் திருப்பலி நிகழ்வுகள்

ஏப்ரல் 26, சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியினை கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தையின் உடல், வளாகத்தினை வந்து சேர்ந்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரும் கரங்களைத் தட்டி திருத்தந்தையின் உடலை வளாகத்திற்கு வரவேற்றனர். வருகைப்பாடலுடன் திருப்பலியானது ஆரம்பமானது. கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் திருப்பலியினை இலத்தீன் மொழியில் ஆரம்பித்தார்.  அதன்பின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து (10:34-43) கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டன.

அதன்பின் ஆண்டவரே என் ஆயர் என்ற திருப்பாடல் எண் 23, இலத்தீன் மொழியில் பதிலுரைப் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் இருந்து இலக்கை நோக்கி ஓடுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டன. திருத்தொண்டர் ஒருவர் யோவான் நற்செய்தியில் இடம்பெறும், இயேசுவும் பேதுருவும் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகளை இலத்தீன் மொழியில்  வாசித்தளித்தார். அதனைத் தொடர்ந்து கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் மறையுரையினை வழங்கினார்.

கர்தினால் ரே அவர்களின் மறையுரையைத் தொடர்ந்து சிறு மணித்துளிகள் அமைதியில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தவர்கள் தியானித்தனர். அதன்பின் அனைத்துல நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்துலக நாடுகளில் வாழும் மக்கள், உரோமன் கத்தோலிக்க திருப்பீடத்தலைவர்கள் மற்றும் அனைத்து ஆன்மாக்கள், நம்பிக்கையாளர்கள், திருப்பலியில் பங்கேற்கும் மக்கள் ஆகிய அனைவருக்காகவும் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. காணிக்கைப் பவனியைத் தொடர்ந்து நடைபெற்ற திருநற்கருணைப் பவனியில் உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஏப்ரல் 2025, 14:14