தேடுதல்

மேரி மேஜர் பெருங்கோவிலை நோக்கிய பயணம்

வத்திக்கானிலிருந்து ஏறக்குறைய 6 கிமீ தூரம் உள்ள உரோமின் வரலாற்று சிறப்பு மிக்க பாதைகளை இறுதியாகக் கடந்து தனது மந்தையின் மக்களுக்கு இறுதி வாழ்த்துக் கூறிய வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் மேரி மேஜர் பெருங்கோவிலை வந்து சேர்ந்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற அடக்கத் திருப்பலியின் திருநற்கருணைப் பவனி நிறைவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் புனிதர்கள் மன்றாட்டு மாலையானது எடுத்துரைக்கப்பட்டதும், முதலில் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா அவர்கள் திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்து புனித நீர் மற்றும் தூபம் கொண்டு அடக்கப்பெட்டிக்கு ஆசிர் வழங்கினார். அதன்பின், கிழக்கத்திய திருஅவை முதுபெரும் தந்தையர்களும் திருத்தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி செபித்தனர். "என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றிப்புகழ்கின்றது" என்ற  அன்னை மரியாவின் பாடலைத் தொடர்ந்து திருத்தந்தையின் உடலானது வத்திக்கான் வளாகத்திலிருந்து புறப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கப் பெட்டியானது வத்திக்கான் வளாகத்திலிருந்து கிளம்பி பெருங்கோவில் உள்புறமாக எடுத்துச்செல்லப்பட்டு சாந்தா மார்த்தா இல்லத்தின் முன்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது வெள்ளை நிற திறந்த வாகனத்தில் வைக்கப்பட்டது.

திருத்தந்தையின்  அடக்கப்பெட்டியானது வளாகத்தை விட்டு கிளம்ப ஆரம்பித்ததும் இறைமக்கள் அனைவரும் கரவொலி எழுப்பியவர்களாய் கண்ணீருடன் திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்தனர். மேலும் சிலர் மேரி மேஜர் பேருங்கோவில் வரை திருத்தந்தையின் அடக்கப்பெட்டியைப் பின்தொடர்ந்து சென்றனர். வத்திக்கான் முதல் மேரி மேஜர் பெருங்கோவில் வரை திருத்தந்தையின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட பாதையெங்கும் ஆயிரக் கணக்கான மக்கள் கரங்களை அசைத்து திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்தனர். ஏறக்குறைய 6 கிமீ தூரம் உள்ள உரோமின் வரலாற்று சிறப்பு மிக்க பாதைகளை இறுதியாகக் கடந்து தனது மந்தையின் மக்களுக்கு இறுதி வாழ்த்துக் கூறிய வண்ணம் உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலை வந்தடைந்தது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்.

மேரி மேஜர் பெருங்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தந்தையின் உடல், பெருங்கோவிலின் வளாகத்தில், புலம்பெயர்ந்தோர், ஏழைகள், முன்னாள் சிறைக் கைதிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என 40 பேர் அடங்கிய குழுவால் வரவேற்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலிற்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மேரி மேஜர் பெருங்கோவில் படிகளில் நின்று வெள்ளை நிற ரோஜா மலர்களைக் கைகளில் தாங்கியவர்களாய் அவர்கள் திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்தனர். உரோம் நகரின் ரெபிபியா சிறையில் புனிதக் கதவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தபோது திருத்தந்தையை சந்தித்த சிறைக்கைதிகளும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

திருஅவையின் தாயாகிய அன்னை மரியாவின் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருக்கும் எளிய மகனாக திருத்தந்தை அவர்களின் உடல் அன்னை மரியாவாலும், தனது வாழ்வு முழுவதும் யாருக்காக அதிகமாகக் குரல் கொடுத்தாரோ அத்தகையோரான, வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட நிகழ்வு மனதை உருக்கும் நிகழ்வாக அமைந்தது. திருத்தந்தைக்கு இறுதி விடை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுள் பெரும்பான்மையினர் ஏற்கனவே திருத்தந்தையை ஒருமுறையேனும் சந்தித்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையாலும் ஓரங்கட்டப்பட்டதாலும் உலகின் கடைநிலையில் இருக்கும் மக்கள், திருத்தந்தைக்கான கடைசி வழியனுப்புச் சடங்கில் கலந்து கொள்வது முக்கியத்துவம் நிறைந்ததாக நோக்கப்படுகிறது.

தனது எல்லாத் திருப்பயணங்கள், மருத்துவமனை சிகிச்சைகள் என எல்லா நிலையிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிச் சென்று செபிக்கும் அன்னை மரியா திரு உருவப்படம் உள்ள சிற்றாலயத்திற்கு அருகில் உள்ள பவுலினோ சிற்றாலயத்தில் திருத்தந்தையின் கல்லறை வெகு எளிமையானதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலத்தீன் மொழியில் திருத்தந்தையின் பெயர் “பிரான்சிஸ்குஸ்” என்று மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக்கான பளிங்கு கற்களானது, திருத்தந்தையின் தாத்தா பாட்டி அர்ஜென்டினா நாட்டிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் வாழ்ந்த இத்தாலிய மாநிலமான லிகூரியாவிலிருந்து அவர்களது உறவினர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்னை மரியின் திரு உருவப்படத்தின் முன் சிறார் சிலர் மலர்க்கொத்துக்களை அர்ப்பணித்தனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஏப்ரல் 2025, 14:21