கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் அடக்கம் செய்யப்பட விரும்பும் இடமாக தேர்ந்தெடுத்த மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் Salus Populi Romani என்ற பெயரில் அன்னை மரியா திரு உருவப்படம் முன் திருத்தந்தையின் அடக்கப்பெட்டியானது வைக்கப்பட்டது.
எந்த ஒரு பயணத்தையும் துவக்கும் முன்னும், முடித்த பின்னும் அன்னை மரியின் அருள் நாடும் அன்பு திருத்தந்தை பிரான்சிஸ், தனது மண்ணகப் பயணத்தின் நிறைவிற்கு நன்றியினையும், விண்ணகப் பயணத்திற்கான துவக்கத்திற்கு ஆசீரையும் பெறுவது போல் இருந்தது இந்நிகழ்வு.
அதன் பின் பவுல் சிற்றாலயத்திற்கும் Sforza சிற்றாலயத்திற்கும் இடையே உள்ள இடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டது. பாஸ்காப்பாடல், நன்றிப்புகழ் மாலை, நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு, பற்றுறுதியும் நம்பிக்கையும் போன்றவற்றை எடுத்துரைக்கும் திருப்பாடல்கள் 114, 118, 42,16 ஆகியவை முன்மொழிகளுடன் இலத்தீன் மொழியில் பாடலாகப் பாடப்பட்டன. கர்தினால் ஃபரெல் அவர்கள் இறுதி செபத்தினை எடுத்துரைத்து, புனித நீர் மற்றும் தூபம் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் இருக்கும் அடக்கப்பெட்டியினை அர்ச்சித்தார். திருத்தந்தையின் அடக்கப்பெட்டி அர்ச்சிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதும் அன்னை மரியின் பாடல் பாடப்பட்டது.
மேரி மேஜர் பெருங்கோவிலுக்குள் Salus Populi Romani என்ற பெயரில் அன்னை மரியா திரு உருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் பவுல் சிற்றாலயத்திற்கும் Sforza சிற்றாலயத்திற்கும் இடையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலானது தரையில் மிக எளிமையாக அடக்கம் செய்யப்பட்டது.
கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலுக்கு சொந்தக்காரர்,
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவாக நின்றவர்,
சமத்துவமின்மைக்கு எதிராக துணிவுடன் பேசியவர்,
இரக்கத்தின் இணையற்ற அடையாளமாக வாழ்ந்தவர்,
துன்புறுவோருடன் துணை நிற்கும் ஆதரவாளராகத் திகழ்ந்தவர்
திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு செய்வதிலும், மனித நேயம் காப்பதிலும்,
மதங்களைக் கடந்து கோடிக்கணக்கான மக்களுக்கு
வழிகாட்டியாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
வழிகாட்டுதலின்படி வாழ முயல்வோம்.
அன்பை விதைத்து, அதை அகிலம் முழுவதும் பரப்பிய அவர் போல
அன்பினால் இவ்வுலகைக் கட்டியெழுப்ப முயல்வோம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மண்ணில்
விதைத்துள்ள விழுமிய விதைகள்
நம் வாழ்வில் துளிர் விடட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்