தேடுதல்

சந்திப்பு, உரையாடலுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்தவர் திருத்தந்தை

"தலைமை ஏற்பது என்பது பணியாற்றுவது” என்ற விழிப்புணர்வுடன் நாம் ஒவ்வொரு நாளும் பணியாற்ற அழைக்கப்படுகிறோம்" - கர்தினால் சாந்திரி

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென்சூடானின் தலைவர்களின் கால்களை முத்தமிட்டு, அமைதியின் பரிசை வேண்டிக் கேட்டுக்கொண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், தலைமுறைகளுக்கு இடையிலான சந்திப்பு, உரையாடல், போன்றவற்றை அதிகமாக வலியுறுத்தியவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி.

ஏப்ரல் 30, புதன்கிழமையன்று மாலை புனித பேதுரு பெருங்கோவிலில் இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான ஒன்பது நாள் செபக்காலத்தின் ஐந்தாம் நாள் திருப்பலியை நிறைவேற்றியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் லெயொனார்தோ சாந்திரி.

நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கேற்ப தனது சகோதர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்திய திருத்தூதர் பேதுரு, “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவர் நமக்காக என்றும் வாழ்கின்றார்” என்பதை தனது வாழ்வில் எடுத்துரைத்தார் என்றும், ஒவ்வொரு நபரின் வரலாற்றின் ஒற்றுமை கடவுளின் கைகளில் உள்ளது என்ற விழிப்புணர்வை நாம் புதுப்பித்து வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் சாந்திரி.

"தலைமை ஏற்பது என்பது பணியாற்றுவது” என்ற விழிப்புணர்வுடன் நாம் ஒவ்வொரு நாளும் பணியாற்ற அழைக்கப்படுகிறோம் என்று வலியுறுத்திய கர்தினால் சாந்திரி அவர்கள், நம் மத்தியில் இருக்கும் தலைவரும் ஆண்டவருமான இயேசுவும் இவ்வாறே பணியாற்று வாழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.

"முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை; வேர்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை, புதிய தளிர்கள் இல்லாமல் மலர்கள் மலர்வதும் இல்லை என்று வலியுறுத்தியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், நினைவுகள் இல்லாமல் ஒருபோதும் இறைவாக்குகள் இல்லை, இறைவாக்குகள் இல்லாமல் ஒருபோதும் நினைவுகள் இல்லை என்று அடிக்கடி எடுத்துரைத்தவர் என்றும் நினைவுகூர்ந்தார் கர்தினால் சாந்திரி.

இறுதியாக, ஆண்டவரே, உமது அடியார் திருத்தந்தை பிரான்சிஸை உம்மிடம் ஒப்படைக்கிறோம், இப்போது உம்முடைய பிரசன்னத்தில் அவரை மகிழ்ச்சியால் நிரப்பும்படி, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மறைபொருளைப் பறைசாற்றும் திருஅவைக்கான அவரது பார்வையை நிறைவேற்ற அருளை வேண்டுகிறோம்!

கடவுளின் தாயும் திருஅவையின் தாயுமான மரியாவே, உமது அன்பான பார்வையை மிகவும் விருப்பத்துடன் நிலைநிறுத்தி, இப்போது உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தில் இளைப்பாறுகிறவருக்காக பரிந்து பேசும் ஆமென் என்று செபித்து தனது மறையுரையினை நிறைவுசெய்தார் கர்தினால் சாந்திரி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மே 2025, 12:41