தேடுதல்

ஐ.நா. பொதுஅவை ஐ.நா. பொதுஅவை  (ANSA)

வருங்காலத் தலைமுறை வாழ உழைப்பதே, திருத்தந்தைக்கான அஞ்சலி

திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து ஐ.நா. பணியிடங்களிலும் ஐ.நா. கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதற்கு ஐ.நா. பொதுஅவையில் திருஅவையின் நன்றியை வெளியிட்டார் பேராயர் காச்சா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இறைபதம் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கென ஏப்ரல் 29ஆம் தேதி கூடிய ஐ.நா. பொதுஅவையின் சிறப்புக் கூட்டத்திற்கு திருஅவையின் நன்றியை வெளியிட்டார் பேராயர் கபிரியேலே காச்சா.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கென கூட்டப்பட்ட ஐ.நா. பொதுஅவையின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் காச்சா அவர்கள்,  திருத்தந்தையின் அடக்கத் திருப்பலியில் கலந்துகொள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ குட்டாரஸ் அவர்கள் வத்திக்கான் வந்ததற்கும், தற்போதைய அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டதற்கும்  முதலில் திருப்பீடத்தின் நன்றியை வெளியிட்டார்.

திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து ஐ.நா. பணியிடங்களிலும் ஐ.நா. கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதற்கும் திருஅவையின் நன்றியை வெளியிட்ட பேராயர் காச்சா அவர்கள், பல தலைவர்கள் இந்த கூட்டத்தில் திருத்தந்தையின் புகழ் பாடியது அவர் எந்த அளவுக்கு உலகின் பாதையை பாதித்திருந்தார் என்பதன் எடுத்துக்காட்டாக இருந்தது என உரைத்தார்.

2015ஆம் தேதி செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா. பொதுஅவையில் உரையாற்றி ஐ.நா. பணிகளைப் பாராட்டியதைக் குறிப்பிட்ட பேராயர் காச்சா அவர்கள், ஐ.நா.வின் 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ குட்டாரஸ் அவர்களை வத்திக்கானில் 2019 டிசம்பர் 20ஆம் தேதி வரவேற்று இருவரும் இணைந்து உலகின் ஏழைகளுக்காக அறிக்கை வெளியிட்டதையும், 2020ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலக மக்களை கோவிட் பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என செபித்ததையும் எடுத்தியம்பினார்.

இவ்வுலகம் பாராமுகம் என்னும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த கவலையை, திருஅவையை வழி நடத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்தே எடுத்துரைத்து வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.

2019ஆம் ஆண்டில் Al-Azhar இஸ்லாம் தலைமைக் குருவுடன் இணைந்து உடன்பிறந்த உணர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டது, இவ்வாண்டு யூபிலி கொண்டாட்டங்களுக்கான தலைப்பாக ‘எதிர்நோக்கின் திருப்பயணி’ என்பதை அறிவித்தது போன்றவைகளையும் எடுத்துரைத்த ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் காச்சா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது, வருங்காலத் தலைமுறை வளமுடன் வாழ உழைப்பதாகும் என மேலும் பொதுஅவைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2025, 12:55