புதிய திருத்தந்தைக்கான தேர்தல் மே 7ல் துவக்கம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருஅவையை இவ்வுலகில் வழி நடத்தும் 267வது தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு மே மாதம் 7ஆம் தேதி வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் துவக்கப்பட்ட உள்ளது.
திருத்தந்தைக்காக திருப்பலி நிறைவேற்றி அவர் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும் ஒன்பது நாள் கொண்ட காலம் மே மாதம் 4ஆம் தேதி திருப்பலியுடன் நிறைவுற உள்ளதைத் தொடர்ந்து இரு நாள் இடைவெளிக்குப்பின் மே மாதம் 7ஆம் தேதி புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் கலந்துகொள்ளும் தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்ட 135 கர்தினால்களும் சிஸ்டைன் கோவிலில் கூடுவர்.
திருத்தந்தையின் அடக்கம், மற்றும் திருத்தந்தையின் தேர்வு ஆகியவைகளைக் குறித்து விவாதித்து வரும் கர்தினால்கள் அவை ஏப்ரல் 28, திங்களன்று தன் ஐந்தாவது அவைக் கூட்டத்தில், தேர்தல் மே மாதம் 7ஆம் தேதி துவங்கும் என்ற முடிவை எடுத்தது.
இந்த ஐந்தாவது கூட்டத்தின்போது ஏறக்குறைய 180 கர்தினால்கள் குழுமியிருக்க, அதில் 100க்கும் மேற்பட்டோர் 80 வயதிற்கு கீழானவர்களாக இருந்தனர்.
வத்திக்கான் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிஸ்டைன் சிற்றாலயம் திருத்தந்தைக்கான தேர்தல் நடக்கும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைச் செய்யப்பட்டதாக இருக்கும்.
மே மாதம் 7ஆம் தேதி பிற்பகலில் சிஸ்டைன் சிற்றாலயத்தில் அடுத்த திருத்தந்தையின் தேர்வில் கலந்துகொள்ளும் கர்தினால்கள் அனைவரும் தங்கள் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வர்.
தான் அடுத்தத் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருஅவையின் இவ்வுலகத் தலைவருக்குரிய கடமைகளை விசுவாசமுடன் நிறைவேற்றுவேன் எனவும், தேர்தல் தொடர்புடைய விவரங்களையும் அங்கு நடந்தவைகளையும் மிகவும் இரகசியமாக வைத்திருப்பேன் எனவும், தேர்தலில் வெளிப்புற தலையீட்டை அனுமதிக்க மாட்டேன் எனவும் ஒவ்வொரு கர்தினாலும் உறுதிமொழி எடுப்பர்.
இதன்பின் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறியபின், வாக்களிப்பவர்களுக்கு திருஅவையின் நலன் குறித்தவைகளில் பொறுப்புணவு குறித்த ஆன்மீக சிந்தனை வழங்கப்படும்.
தேர்தல் காலத்தின்போது, கடிதம் எழுதுவதோ, கலந்துரையாடலோ, தொலைபேசி அழைப்புக்களோ, மிகவும் அவசரமாக இருந்தாலொழிய அனுமதிக்கப்படாது.
தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்களுக்கு பத்திரிகைகளும், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தடைச் செய்யப்பட்டவைகளாகவே இருக்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்