தேடுதல்

வத்திக்கான் நகரம் வத்திக்கான் நகரம் 

வாரம் ஓர் அலசல் – மறைந்த திருத்தந்தைக்காக செபிக்கும் நாட்கள்

தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவின் துன்ப மரணம், திருத்தந்தையரின் வரலாற்றில், பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. திருத்தந்தையரின் வரலாறு சுவை நிறைந்தது, அதேவேளை, வேதனையும் கலந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே “சேதே வக்காந்தே” என திருஅவையில் அழைக்கப்படும் காலத்தில் நாம் தற்போது இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்னவென்றால், தலைமைப்பீடம் காலியாக இருக்கின்ற காலம் என்பதாகும். அதாவது ஒரு திருத்தந்தை இறந்து அல்லது பணியிலிருந்து விலகி, அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலமே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் கர்தினால்கள் அவை  வத்திக்கான் நிர்வாகப் பொறுப்புக்களை சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் எடுத்துக் கொள்ளும். தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியுடன் சேர்த்து, ஒன்பது நாட்கள் அத்திருத்தந்தைக்காக செபிப்பதற்கான துக்க நாள்களாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. புனித பேதுரு வளாகத்தில் வத்திக்கானில் ஏப்ரல் 26, சனிக்கிழமையன்று இடம்பெற்ற அடக்கத் திருப்பலிக்குப்பின் ஞாயிறன்று 27ஆம் தேதி உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு இறைஇரக்க ஞாயிறன்று இரண்டாவது ‘ஒன்பது நாள் துக்க தின' திருப்பலி இடம்பெற்றது. இத்திருப்பலி கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் வத்திக்கான் நாட்டின் பணியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது நாள் திருப்பலி கர்தினால் பல்தசாரே ரெய்னா அவர்களின் தலைமையில் மாலை 5 மணிக்கு உரோம் மறைமாவட்ட விசுவாசிகளுடனும், நான்காம் நாள், அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு கர்தினால் மௌரோ கம்பெத்தி, 30ஆம் தேதி மாலையில் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி, மே முதல் தேதி கர்தினால் கெவின் ஜோசப் பெரெல் அவர்களாலும், 2ஆம் தேதி கர்தினால் கிளவ்தியோ குகரோத்தி, 3ஆம் தேதி கர்தினால் ஆஞ்சல் பெர்னாண்டஸ் அர்த்திமே அவர்களாலும், இறுதி நாளான மே மாதம் 4ஆம் தேதியின் திருப்பலி கர்தினால் தொமினிக் மம்பெர்த்தி அவர்களாலும் நிறைவேற்றப்படும்.

புனித பேதுரு முதல், திருத்தந்தையர்

திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவின் துன்ப மரணம், திருத்தந்தையரின் வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. திருத்தந்தையரின் வரலாறு சுவை நிறைந்தது, அதேவேளை, வேதனையும் கலந்தது. திருத்தந்தையர்களின் காலத்தில் துளிர்விட ஆரம்பித்த தவறானக் கொள்கைகளாலும், மன்னர்களின் விரோதப் போக்காலும் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தனர் அவர்கள். சிறையிலடைக்கப்பட்டவர்கள், டைபர் நதியில் உடல் வீசப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் என இந்த வரலாறு கொஞ்சம் நீளமானது. 266 பேரில் 40 பேர் கொலையுண்டுள்ளனர் என வரலாறு கூறுகின்றது.  

புனித பேதுருவை தொடர்ந்து வந்த ஆதிகால திருத்தந்தையர் பலர் மறைசாட்சியாக உயிரிழந்தனர். 16வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற Callixtus அடிமையாக இருந்து திருத்தந்தையானவர். இரண்டு திருத்தந்தையர்களின் ஆட்சி, முதலில் துவங்கியது, திருத்தந்தை Callixtus அவர்களின் காலத்தில்தான். கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலகமும் இவர் காலத்தில் உரோமில் துவங்கியது. இந்த கலகத்தில் திருத்தந்தை Callixtus கொல்லப்பட்டு, அவர் உடல் கிணற்றில் வீசப்பட்டு, கல்லால் எறியப்பட்டதாக ஒரு வரலாற்று ஏடு கூறுகிறது. திருத்தந்தை Clement அவர்கள், பளிங்குக் கல் வெட்டும் இடத்திற்குக் கூலியாளாக தண்டனையளிக்கப்பட்டு, கடலில் வீசப்பட்டு உயிரிழந்தார்.

235ம் ஆண்டில் மன்னர் Maximinus Thracian, கிறிஸ்தவர்களை, குறிப்பாக கிறிஸ்தவத் தலைவர்களை சித்ரவதைப்படுத்தத் தொடங்கினார். இதில் திருத்தந்தை Pontianம் எதிர்திருத்தந்தை Hippolytusம் கைது செய்யப்பட்டனர். இருவரையும் சர்தேனியா தீவுக்கு மன்னர் தண்டனையாக அனுப்பியதைத் தொடர்ந்து, திருஅவையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உதவும் நோக்கத்தில் திருத்தந்தை Pontian தானாகவே முன்வந்து பதவி விலகினார். திருத்தந்தை Pontian, சர்தேனியா சுரங்கத்தில் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து அங்கேயே மறைசாட்சியாய் உயிரிழந்தார். இப்படி திருத்தந்தையர்களுள் எத்தனையோ மறைசாட்சிய மரணங்கள்.

போப் என்ற சொல்லின் தோற்றம்

போப் (pope) என்ற சொல், pappas (πάππας) என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிறந்ததாகும். இலத்தீனில் papa எனப்படும் இச்சொல்லுக்கு, "தந்தை" என்று அர்த்தம். தொடக்ககாலக் கிறிஸ்தவத்தில், குறிப்பாக கிழக்கில் அனைத்து ஆயர்களும், மூத்த குருக்களும் போப் என்றே அழைக்கப்பட்டனர். அலெக்சாந்திரியாவின் பேராயராகிய எகிப்தின் முதுபெரும் தலைவரே முதலில் போப் என்று அழைக்கப்பட்டார். 232ஆம் ஆண்டு முதல் 249ஆம் ஆண்டு வரை அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவராக இருந்த ஹெராகிளேயுஸ் (Heracleus) அவர்களே, முதன்முதலாக தந்தை ஹெராகிளேயுஸ் என அழைக்கப்பட்டார். எனவே காப்டிக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவரே முதலில் போப் என்று அழைக்கப்பட்டு வந்தார். எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவர்கள், காப்டிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பின்னர் 6ஆம் நூற்றாண்டில், அதாவது, 523ஆம் ஆண்டு முதல் 526ஆம் ஆண்டுவரை பதவியிலிருந்த உரோமன் கத்தோலிக்க ஆயராகிய முதலாம் ஜான்தான், போப், அதாவது தந்தை என்ற அடைமொழியை முதலில் பயன்படுத்தினார்.

திருத்தந்தையரின் பெயர்கள்

திருத்தந்தையர்களின் பெயர்களைப் பார்த்தோமானால் ஜான் என்ற பெயர்தான் 23 தடவைகளும், கிரகரி, பெனடிக்ட் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் 16 தடவைகளும் வந்துள்ளன. ஆனால், 20ஆம் அருளப்பர் என்ற பெயரை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. 43 பெயர்கள் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படவில்லை.

திருத்தந்தையர் தங்களது திருமுழுக்குப் பெயர்களிலிருந்து வேறு பெயர்களை வைக்கும் பழக்கம், 533ஆம் ஆண்டுதான் முதலில் தொடங்கியுள்ளது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அப்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் இயற்பெயர் மெர்க்குரி. மெர்க்குரி என்பது, அப்போது வணங்கப்பட்ட புறவினக் கடவுளின் பெயராகும். ஆகவே இவர் இரண்டாம் ஜான் எனப் புதுப்பெயரை வைத்துக் கொண்டார். 1555ஆம் ஆண்டு திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் மார்செலுசுக்குப் பின்னர் எத்திருத்தந்தையும் தங்கள் இயற்பெயரை வைத்துக் கொண்டதில்லை. இரு திருத்தந்தையரே, இரண்டு பெயர்களை இணைத்து சூட்டிக்கொண்டார்கள். அவர்கள், முதலாம் ஜான் பால் அவர்களும்,  இரண்டாம் ஜான் பால் அவர்களும்.

அதிக காலம் திருஅவையை வழி நடத்தியவர்கள்

திருத்தந்தையரின் வரலாற்றில், புனித பேதுருவுக்குப்பின் அதிக ஆண்டுகள் திருஅவையை  இவ்வுலகில் வழிநடத்தியவர் என்று பார்த்தால், 1846 முதல் 1878 வரை ஏறத்தாழ 32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பயஸ் அவர்களே. முதல் திருத்தந்தை புனித பேதுரு கி.பி. 30ம் ஆண்டு முதல் 64 அல்லது 67 வரை, அதாவது, 37 ஆண்டுகள், திருத்தந்தையாக வழிநடத்தியுள்ளார். அதற்கு அடுத்ததாக, 31 ஆண்டுகள் 7 மாதங்கள் 23 நாட்கள் திருத்தந்தையாக பணியாற்றியவர் திருத்தந்தை 9ம் பயஸ். வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9ம் பயஸுக்கு அடுத்து வருபவர், நம்முடைய காலத்தில் வாழ்ந்த, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால். இவர் 26 ஆண்டுகள் 5 மாதங்கள் 18 நாட்கள் திருஅவையை வழிநடத்திச் சென்றார்.

குறுகிய காலம் வழிநடத்தியவர்கள் என்ற வரிசையில், திருத்தந்தை 7ஆம் உர்பான் 12 நாள்களும், 6ஆம் பொனிபாஸ் 15 நாள்களும், 4ஆம் செலஸ்தீன் 16 நாள்களும், 3ஆம் பயஸ் 17 நாள்களும், முதலாம் ஜான் பால் 33 நாள்களும் பதவியில் இருந்துள்ளனர். 752ஆம் ஆண்டு தேர்வுச் செய்யப்பட்ட 2ஆம் ஸ்தேவான் அவர்கள், பதவியேற்கும் முன் மூன்று நாட்களில் உயிரிழந்தார் எனவும் சில வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

திருத்தந்தையர் பணியேற்பு

திருஅவையின் தலைமைப் பொறுப்பை திருத்தந்தையர் ஏற்கும் நாள், முடிசூட்டு விழா என்றே பல நூற்றாண்டுகள் அழைக்கப்பட்டது. 1143ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி திருத்தந்தை 2ஆம் செலஸ்தீன் அவர்களே முதன் முறையாக முடிசூட்டப்பட்டவர்.

திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்கள் 1963ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்த மகுடத்தை அணிந்ததே இறுதி முறையாக அமைந்திருந்தது. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான்பால், மகுடம் அணியும் சடங்குக்குப் பதிலாக, 'Pallium' எனப்படும் கழுத்துப்பட்டை அணியும் சடங்கை அறிமுகப்படுத்தினார்.

இளவயது, முதிர் வயது திருத்தந்தையர் 

திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 3 பேர் 25 வயதுக்குட்பட்டும், ஏழு பேர் 25க்கும் 40 வயதுக்கும் உட்பட்டும், 11 பேர் 41க்கும் 50 வயதுக்குட்பட்டும், 24 பேர் தங்களது 50வது வயதுகளிலும், 37 பேர் 61க்கும் 70 வயதுக்கும் உட்பட்டும் இருந்தனர். மூன்று பேர் மட்டுமே 80 வயதுக்கு மேற்பட்டு இருந்தனர். திருத்தந்தை ஒன்பதாம் பெனடிக்ட், தனது 12 முதல் 20 வயதுக்குள் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருத்தந்தை 12ஆம் ஜான், 18ஆம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 996ஆம் ஆண்டில் 24 வயது 5ஆம் கிரகரியும், 1513ஆம் ஆண்டில் 37 வயது 10ஆம் சிங்கராயரும், 1523ஆம் ஆண்டில் 44 வயது 7ஆம் கிளமென்ட்டும், 1978ஆம் ஆண்டில் 65 வயது முதலாம் ஜான் பாலும் அதே ஆண்டில் 58 வயது   2ஆம் ஜான் பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருமண வாழ்வில் திருத்தந்தையர்

தொடக்ககாலத் திருஅவையில் திருத்தந்தையர் திருமணம் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனவே, திருத்தந்தை ஹோர்மிதாஸ்(514-523) திருத்தந்தை சில்வேரியுசின்(536-537) தந்தையாவார். திருத்தந்தை முதலாம் கிரகரி(590-604) திருத்தந்தை 3ஆம் ஃபெலிக்சின்(483-492) பேரனாவார். 867ஆம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் ஏட்ரியனுக்குப் பிறகு எவரும் திருமணம் புரிந்தவர்களாக இல்லை.

திருத்தந்தையர்களும் பிறப்பிடமும்

திருஅவையில் இதுவரை வழிநடத்தி மறைந்துள்ள 266 திருத்தந்தையர்களுள் 205 பேர் இத்தாலியர்கள். அதிலும் 106 பேர் உரோமையர்கள். 59 பேரே வெளிநாட்டவர்கள். அதிலும் 19 என முன்னிலை வகிப்பவர்கள் பிரான்ஸ் நாட்டவர், 14 பேர் கிரேக்கர், 8 பேர் சிரியா நாட்டினர், 8 பேர் ஜெர்மானியர், 3 பேர் ஆப்ரிக்கர்கள், 2 பேர் இஸ்பானியர்கள். ஒருவர் அதாவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பானிய மொழி பேசும் தென் அமெரிக்க நாட்டவர். இன்னும் ஆஸ்ட்ரியர், பாலஸ்தீனியர், ஆங்கிலேயர், டச்சு, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவர் வீதம் திருஅவையை வழிநடத்தியிருக்கின்றனர்..

திருத்தந்தையாக இருந்த மூன்று ஆப்ரிக்கர்களும் புனிதர்கள். அவர்கள் முறையே புனிதர்கள் விக்டர், மிலிதியாதெஸ் மற்றும் முதலாம் ஜெலாசியுஸ். முறைப்படி திருஅவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக்கு எதிராகத் தாங்களே திருத்தந்தையாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். இவ்வாறு 38 பேர் இருந்துள்ளனர். 1449ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்நிலை உருவாகவில்லை. இவ்வாறு கடைசியாக இருந்தவர் திருத்தந்தை ஐந்தாம் பெலிக்ஸ்.

திருத்தந்தையர் 3ம் ஸ்தேவானும், முதலாம் பவுலும் சகோதரர்கள். அதேபோல் 19ஆம் ஜானும், 8ஆம் பெனடிக்டும் சகோதரர்கள்.

அன்புள்ளங்களே, அடுத்த திருத்த்னதை குறித்த பல்வேறு ஊகங்கள் இருப்பினும், அண்மைக்காலங்களில் எந்த யூகமும் உண்மையானதில்லை. திருத்தந்தையர் முதலாம் ஜான் பால், புனித இரண்டாம் ஜான் பால், 16ஆம் பெனடிக்ட், பிரான்சிஸ் ஆகியோரை நாம் எதிர்பார்க்கவில்லை. தூய ஆவியாரின் தூண்டுதலால் கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்களின் வழியில் அடுத்த புதிய திருத்தந்தை வர  செபிப்போம் என வேண்டி, வாரம் ஓர் அலசலை நிறைவுச் செய்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2025, 16:11