தேடுதல்

சூடான் குழந்தைகள் சூடான் குழந்தைகள்  

சூடானில் 8,25,000 குழந்தைகள் மோதல்களில் சிக்கியுள்ளனர்!

சூடானில் நிகழ்ந்துவரும் மோதலில் மூன்று மாதங்களில் அல் ஃபாஷரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிர வான்வழித் தாக்குதல்கள் ஜம்சாமில் குழந்தைகளுக்கு ஆபத்தை அதிகரித்துள்ளன : யுனிசெஃப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானின் தர்ஃபர் மாநிலத்தில், 8,25,000 குழந்தைகள் மோதல் நிகழும் பகுதிகளில், குறிப்பாக அல் ஃபாஷர் மற்றும் ஜம்சாம் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சிக்கியுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 27, வியாழக்கிழமை, இந்தத் தகவலை அறிக்கையொன்றில் வழங்கியுள்ள அந்நிறுவனம், 4,57,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏறக்குறைய 1,46,000 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் மூன்று மாதங்களில் அல் ஃபாஷரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் தீவிர வான்வழித் தாக்குதல்கள் ஜம்சாமில் குழந்தைகளுக்கு ஆபத்தை அதிகரித்துள்ளன என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் உதவிக்கான முக்கிய வழிகள் தடுக்கப்பட்டு, மனிதாபிமான அணுகல் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகள் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்தப் பகுதிகளில் உதவிப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ள யுனிசெஃப் நிறுவனம், உடனடித் தலையீடு இல்லாமல் அவர்களின் உயிர்வாழ்வதற்கான ஆபத்து அதிகரித்து வருவது குறித்தும் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2025, 14:33