சிரியாவில் 1 கோடியே 5 இலட்சம் குழந்தைகள் போரின்போது பிறக்கின்றன!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிரியா குழந்தைகளில் பலர் 14 ஆண்டுகால கொடூரமான மோதலில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளதால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவதற்கான அவசர அனைத்துலக ஆதரவைக் கோரியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
சிரியாவின் 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் போரின் போது பிறந்தவர்கள் என்றும், மேலும் இக்குழந்தைகள் இடம்பெயர்வு மற்றும் வன்முறை உள்ளிட்ட கடுமையான துன்பங்களை எதிர்கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளது அந்நிறுவனம்.
சிரியாவில் நிகழ்ந்து வரும் அண்மைய வன்முறைகள் அங்கு நிலைமைகளை மோசமாக்கி உள்ளது என்றும், இதில் குறைந்தது 13 குழந்தைகள் கொல்லப்பட்டு பரவலான இடம்பெயர்வுக்கு வழிவகுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
மேலும் அங்கு நிலைமை இன்னும் பேரழிவைத் தரக்கூடியதாகவே உள்ளது என்றும், பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அந்நிறுவனம், மேலும் இச்சூழல் குழந்தைத் தொழிலாளர் மற்றும் இளவயது திருமணம் போன்ற அவநம்பிக்கையான நடவடிக்கைகளுக்கு மக்களை ஆட்படுத்துகின்றது என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை வழங்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்