தேடுதல்

கடவுளின் மகனான மெசியாவை அடையாளம் காண முயல்வோம்

இயேசுவை தச்சர் யோசேப்பின் மகனாக அறிந்துகொண்டிருந்த மக்கள், தொழுகைக்கூடத்தில் இயேசு எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசித்து இன்று இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறுவதைக் கேட்டுக் குழப்பமடைகின்றார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் மகனான இயேசுவை,  நம் மீட்பரை, அடையாளம் காண அழைக்கப்படுகிறோம் என்றும், எப்போதாவது நாம் ஏழையாக, சிறையில் அடைக்கப்பட்டவர்களாக, பார்வையற்றவர்களாக, உணர்ந்திருந்தோம் என்றால் இந்தக் கடவுளது அருளின் ஆண்டு நமக்கானதாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 26, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலிலேயாவில் இயேசுவின் பணியின் தொடக்கம் என்ற தலைப்பில் உள்ள லூக்கா நற்செய்தியின் இறைவார்த்தைகள் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இயேசுவை தச்சர் யோசேப்பின் மகனாக அறிந்துகொண்டிருந்த மக்கள் தொழுகைக்கூடத்தில் இயேசு எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசித்து இன்று இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறுவதைக் கேட்டுக் குழப்பமடைகின்றார்கள் என்றும், அவர்களால் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதனை தங்களது பார்வையாலும் வார்த்தையாலும் வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்கள் அவரை நன்கு அறிந்திருப்பதாக நினைத்தார்கள், ஆனால் அவர்களின் மனதையும் இதயத்தையும் திறக்க உதவுவதற்குப் பதிலாக இயேசு கூறிய வார்த்தைகள் ஒளியை மறைக்கும் ஒரு திரையைப் போல அவர்களைத் தடுத்தது என்று நற்செய்தியாளர் லூக்கா தனது வார்த்தைகளில் எடுத்துரைப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் பிரசன்னம் மற்றும் வார்த்தைகளால் சவாலுக்கு உட்படுத்தப்படும் நாமும் கடவுளின் மகனான இயேசுவை,  நம் மீட்பரை அடையாளம் காண அழைக்கப்படுகிறோம் என்றும்,  அவரது சொந்த ஊர் மக்கள் போலவே நாம் அவரை நன்கு அறிந்திருந்தாலும் நமது வாழ்வில் மிக நெருக்கமான நபராக நாம் உணர்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

நாசரேத்தில் பேசும் இயேசுவின் தனித்துவமான அதிகாரத்தை நாம் உணர்கிறோமா? வேறு யாராலும் நமக்குக் கொடுக்க முடியாத மீட்பின் அறிவிப்பை தாங்கியவர் அவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?  நம்மைப் பற்றியும் நமக்கு மீட்புத் தேவை என்பது பற்றியும் நாம் உணர்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், எப்போதாவது நாம் ஏழையாக, சிறையில் அடைக்கப்பட்டவர்களாக, பார்வையற்றவர்களாக, உணர்ந்து இருந்தோம் என்றால் கடவுளின் இந்த அருளின் ஆண்டு நமக்கானதாக இருக்கும் என்றும் கூறினார்.

இயேசு தனது உடனிருப்பால் கடவுளது அருளின் ஆண்டு வந்துவிட்டது என்று அறிவிக்கின்றார் என்றும், கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசுவை  நாசரேத்துர் மக்கள் மெசியாவாக அடையாளம் காணத் தவறிவிட்டார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை அடையாளம் காண உதவும்படி கடவுளின் தாயும் நம் தாயுமான மரியாவிடம் நம்பிக்கையுடன் திரும்புவோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் மூவேளை செப உரைக்குப்பின் திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜனவரி 2025, 16:24

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >