இதயத்தின் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் தவக்காலம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தவக்காலப் பயணம் நம்மை இதயத்தின் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்கின்றது, உயிர்ப்பின் மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கின்றது என்றும், தூய்மைப்படுத்துதலின் காலம், ஆன்மிகப் புதுப்பித்தலின் காலம், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் பிறரன்புப் பணிகளில் வளர்வதற்கான காலம் இத்தவக்காலம் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை தவக்காலத்தின் முதல் வாரத்தை முன்னிட்டு மூவேளை செப உரையினை முன்னதாகவே தயாரித்து திருப்பீடத்தகவல் தொடர்பகத்திற்கு வழங்கியுள்ள எழுத்துவடிவப் படிவத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் சிறப்பிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலியினை தனது மூவேளை செப உரைக் கருத்தில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், நாம் வாழ்கின்ற சமூகம், சந்தைக் கருத்தியல்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது என்றும், தனிநபர் இலாபம் மற்றும் பலன்களை எதிர்பார்த்துப் பணியாற்றும் இச்சமூகத்தில் தன்னார்வலர்களின் பணியானது எதிர்நோக்கின் அடையாளமாகவும், இறைவாக்காகவும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இறைவாக்கினர்களாக இருக்கும் தன்னார்வலர்கள் தங்களது பிறரன்புப் பணியினால் மிகவும் தேவையிலிருப்பவர்களுக்கு ஒன்றிப்பையும், உதவியையும் இலவசமாகவும், முதன்மையாகவும் வழங்குகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
தன்னார்வ மனம் கொண்டு தங்களது நேரத்தையும் திறனையும் வழங்கி உழைக்கும் அத்தனை பணியாளர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், அயலாருக்கு உதவிகள் செய்து, அருகிருப்பு, மென்மை மற்றும் நெருக்கத்துடன் பணியாற்றி, அவர்களது உள்ளத்தில் எதிர்நோக்கை மீண்டும் எழுப்பிவிடுவதற்காகத் தனது நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் நீண்ட காலம் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுவரும் திருத்தந்தை அவர்கள், இக்காலத்தில் மருத்துவர்கள், நலவாழ்வுப் பணியாளர்களின் அருகிருப்பு, மென்மை, நெருக்கம் ஆகியவற்றைத் தான் அனுபவித்து வருவதாக எடுத்துரைத்து அனைவருக்கும் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
நோயுற்றவர்களுக்கு மிக நெருக்கமாகவும், இறைப்பிரசன்னத்தின் அடையாளமாகவும் இருந்து உதவும் பலரை நினைவுகூர்வதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், சோதனையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, துன்பத்தின் இரவில் சிறிது வெளிச்சத்தைக் கொண்டு வரும் மென்மையின் அதிசயம் நமக்குத் தேவை என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தனக்காக செபிக்கும் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், உரோமன் கூரியாவின் தவக்கால தியானத்தில் பங்கேற்கும் அனைவருடனும் ஆன்மிக அளவில் உடனிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், மியான்மார், சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் அமைதி என்னும் பரிசைப் பெற சிறப்பாக நாம் ஒன்றிணைந்து செபிப்போம் என்றும், சிரியாவின் சில பகுதிகளில் தொடங்கியுள்ள கவலையளிக்கின்ற வன்முறையானது சமூகத்தின் அனைத்து இன, மதக் கூறுகளுக்கும், குறிப்பாக பொதுமக்களுக்கும் முழு மரியாதை அளிக்க அவ்வன்முறை விரைவில் நிறுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்