தேடுதல்

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

மோதல்களின்போது பன்னாட்டு மரபுகளைக் கடைபிடிப்பவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கை மற்றும் புனிதமான வாழ்க்கையை மதிப்பவர்களாகவும் இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருக்கவேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியின் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மோதல்களின்போது பன்னாட்டு மரபுகளைக் கடைபிடிப்பவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை மற்றும் புனிதமான வாழ்க்கையை மதிப்பவர்களாகவும் இராணுவம் காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருக்கவேண்டுமே தவிர, நாடுகளின்மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாளில் அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்கான தனது செப விண்ணப்பங்களையும் எடுத்துரைத்தார்.  

போரினால் துன்புறும் நாடுகளுக்காக செபிப்போம், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மத்திய கிழக்கும் நாடுகள், மியான்மார், கீவ், சூடான் நாடுகளில் உள்ள மக்களுக்காக செபிப்போம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக செபிப்போம், எல்லா இடங்களிலும் ஆயுதங்கள் அமைதியடைந்து, அமைதிக்காகக் கண்ணீருடன் குரல் எழுப்பும் மக்களின் கூக்குரல் கேட்கப்படட்டும் என்றும் தெரிவித்தார்.

அமைதியின் அரசியாகிய தூய கன்னி மரியாவிடம் அமைதிக்கான நமது பரிந்துரையை எடுத்துரைப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மூவேளை செபத்தைத் தொடர்ந்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 பிப்ரவரி 2025, 14:46

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >