தேடுதல்

இரக்கமுள்ள தந்தை இரக்கமுள்ள தந்தை

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - இரக்கமுள்ள தந்தை

ஏப்ரல் 16, புனித புதன்கிழமையன்று நமது எதிர்நோக்கு இயேசுகிறிஸ்து என்னும் யூபிலி ஆண்டு தொடர் மறைக்கல்வியின் இரண்டாவது பகுதியாக இயேசுவின் வாழ்க்கை - உவமைகள் என்னும் பகுதி பற்றி எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏப்ரல் 16, புனித புதன்கிழமையன்று நமது எதிர்நோக்கு இயேசுகிறிஸ்து என்னும் யூபிலி ஆண்டு தொடர் மறைக்கல்வியின் இரண்டாவது பகுதியாக இயேசுவின் வாழ்க்கை - உவமைகள் என்னும் பகுதி பற்றி எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யூபிலி ஆண்டு 2025 முன்னிட்டு தனது இயேசுவின் குழந்தைப்பருவம், இயேசுவின் சந்திப்புக்கள் பற்றி கடந்த வாரங்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்து வந்துள்ள திருத்தந்தை அவர்கள், இன்று இயேசுவின் வாழ்க்கை - உவமைகள் என்னும் அடுத்த பகுதியில் லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் காணாமற் போன மகன் உவமை பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவ்வுவமையில் இடம்பெறும் இரக்கமுள்ள தந்தை எடுத்துரைக்கும் வார்த்தைகளான “காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்” (லூக்:15:32) என்ற இறைவார்த்தையை முன்னிருத்தி தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

லூக்கா 15: 31-32

அதற்குத் தந்தை, மூத்தமகனை நோக்கி ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள்

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

நற்செய்தியில் இயேசு சந்தித்த நபர்களைப் பற்றி அண்மைய வாரங்களில் அறிந்து வந்த நாம், இயேசு கூறிய சில உவமைகள் பற்றிய கருத்துக்களை இனி வரும் வாரங்களில் காண்போம். இயேசுவின் உவமைகள் அன்றாட, எதார்த்த வாழ்வில் இடம்பெறும் மனிதர்களின்  சாயல்களையும் ,அவர்கள் வாழும் சூழல்களையும் உள்ளடக்கியது. எனவே

தான் அவ்வுவமைகள் நமது வாழ்வைத் தொடுபவைகளாக இருக்கின்றன. அவ்வுவமையில் இடம்பெறும் மனிதர்கள் போல வாழத் தூண்டுகின்றன. இந்த  உவமையில் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்ற நமது வாழ்விற்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்துகின்றன.  

உவமைகளிலேயே மிகவும் பிரபலமான ஓர் உவமையுடன் நமது இந்த உவமைகள் பகுதியைத் தொடங்குவோம். நாம் குழந்தைகளாக இருந்தபோதிருந்தே நம் அனைவரின் நினைவில் இருக்கும் ஓர் உவமை தான், ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களின் உவமை. இயேசுவின் இந்த உவமையில் (லூக்கா 15:1-3,11-32) இறைத்தந்தையின் இரக்கம் என்னும் நற்செய்தியின் இதயத்தை நாம் காணலாம்.

இயேசு இந்த உவமையை பரிசேயர்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் சொல்கிறார் என்று நற்செய்தியாளர் லூக்கா கூறுகிறார். ஏனெனில் அவர்கள், இயேசு பாவிகளுடன் உணவருந்துவதைப் பற்றி முணுமுணுத்தார்கள். எனவே இந்த உவமையை, கடவுளின் இரக்கத்தை விட்டு தொலைந்து போனவர்கள், ஆனால் அதை அறியாமல் மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்கள் ஆகியோருக்காக எழுதப்பட்ட உவமை என்று கூட கூறலாம்.

இந்த நற்செய்தியானது எதிர்நோக்கின் செய்தியை வழங்க விரும்புகிறது, ஏனெனில் நாம் எங்கு, எப்படி தொலைந்து போனாலும், கடவுள் எப்போதும் நம்மைத் தேடி வருகிறார் என்பதை நமக்குச் சொல்கிறது. ஓர் ஆட்டைப் போல நாம் தொலைந்து போயிருக்கலாம், புல் மேயும் பாதையிலிருந்து விலகிச் சென்ற ஆடாக, சோர்வு காரணமாக தனது மந்தையிலிருந்து பின்தங்கிய ஆடாக, நாம் காணாமல் போயிருக்கலாம். அல்லது தரையில் விழுந்து தேடிக் கண்டறிய முடிந்திராத, ஒரு தொலைந்து போன திராக்மாவைப் போல, அல்லது யாரோ ஒருவரால் எங்காவது வைக்கப்பட்டு, எங்கே வைக்கப்பட்டோம் என்பது மறக்கப்பட்ட ஒரு நாணயமாக நாம் காணாமல் போயிருக்கலாம். இன்று நாம் காணும் தந்தையின் இரண்டு மகன்களில் ஒருவராகக் கூட நாம் காணாமல் போயிருக்கலாம். இளைய மகன் ஓர் உறவிற்குள் இருப்பதால் மிகவும் சோர்வடைந்தவராக, அந்த உறவில் அதிகமான கோரிக்கைகளை உணர்ந்தவராக காணாமல் போகின்றார். மூத்த மகனோ, தனது இதயத்தில் பெருமையும் வெறுப்பும் கொண்டிருந்ததால் வீட்டில் இருப்பது தேவையற்றது என்று எண்ணி காணாமல் போகின்றார்.

அன்பு என்பது எப்போதும் ஓர் அர்ப்பணிப்பு; அன்புடன் மற்றவரை நாம் சந்திக்கச் செல்லும்போது ஏதாவது ஒன்றினைக் கண்டிப்பாக நாம் இழக்க வேண்டியிருக்கும். உவமையில் வரும் இளைய மகன் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தின் சில நிகழ்வுகளில் நடப்பது போல தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறார். இளையமகன் போல வாழும் பெரியவர்களையும் நாம் நம்மைச் சுற்றிக் காண்கிறோம். சுயநலவாதிகளாக அவர்கள் இருப்பதால் ஓர் உறவை எப்படித் தொடர்வது என்பதை அறியாமல் தவறிவிடுகிறார்கள். அவர்கள் உறவில் தங்களைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக இழந்து ஏமாற்றமடைகின்றார்கள். ஏனெனில் நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போது தான் நாம் உண்மையிலேயே வாழ்கிறோம் என்று அர்த்தம் அங்குதான் நாம் நம்மையேக் கண்டறிய முடியும்.

இளைய மகன், நம் அனைவரையும் போலவே, அன்பிற்காக ஏங்குகிறார், அன்பு செய்யப்பட விரும்புகிறார். அன்பு என்பது ஒரு விலைமதிப்பற்ற பரிசு; அதை கவனமாக கையாள வேண்டும். அந்த அன்பை மதிக்காமல் வீணாக்குகிறார். யாரும் தன்னைப் பற்றி கவலைப்படாத  அந்த பஞ்ச காலத்தில் அந்த அன்பு அவரிடத்தில் இல்லாதது பற்றி அவர் சிந்திக்கின்றார். அப்படியான சூழல்களில் நாம், காணும் எஜமானரிடம் அன்பிற்காக நம்மை இணைத்துக் கொள்ளும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இத்தகைய அனுபவங்கள், நாம் செய்த குற்றங்களுக்குக் கண்டிப்பாக நாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றோ, அல்லது உண்மையான அன்பு எங்கும் இருக்க முடியாது என்பதைப் போன்றோ நம் மனதில் பல எண்ணங்களை எழச்செய்கின்றன. பணியாளர்களாக, அடிமைகளாக மட்டுமே நாம் நமது உறவுகளில் இருக்க முடியும் என்ற சிதைந்த நம்பிக்கையை நமக்குள் எழுப்புகின்றன. உண்மையில், இளைய மகன் தனது வாழ்வின் பாழடைந்த நிலையின் எல்லையைத் தொட்டவுடன் தந்தையின் அன்பினை நினைக்கின்றார். தனது தந்தையின் வீட்டில் பணியாளர்கள் கூட அன்புடன் பராமரிக்கப்படுவதை நினைவுகூர்ந்து, அத்தகைய அன்பின் சிறு சிதறல்களையாவது தானும் பெற எண்ணுகின்றார். எனவே தந்தையின் இல்லத்திற்குத் திரும்ப நினைக்கின்றார்.

நம்மை உண்மையாக அன்பு செய்பவர்களால் மட்டுமே, அன்பைப் பற்றிய நமது தவறான பார்வையிலிருந்து நம்மை விடுவிக்க முடியும். கடவுளுடனான நமது உறவில் இந்த அனுபவத்தினை நாம் சிறப்பாக உணர முடியும். சிறந்த ஓவியரான ரெம்ப்ராண்ட், ஒரு பிரபலமான ஓவியத்தில், இந்த உவமையில் இடம்பெறும் இளைய மகனின் வருகையை அழகாக வடித்துள்ளார். குறிப்பாக, அதில் இடம்பெறும் இரண்டு விவரங்களில் ஒன்று இளைய மகனின் தலை. அவரது தலை முடியானது தவம் செய்யும் துறவியைப் போல மொட்டையடிக்கப்பட்டுள்ளது, ஒரு நிலையில் பார்ப்பதற்கு அது ஒரு குழந்தையின் தலையைப் போலவும் தெரிகிறது.  ஏனெனில் இந்த மகன் மீண்டும் பிறக்கிறார் என்பதை அது அடையாளப்படுத்துகின்றது. இரண்டாவது தந்தையின் கரங்கள். ஒரு கரம் ஆணின் கரத்தைப் போன்றும் மற்றொன்று பெண்ணின் கரத்தைப் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணின் வலிமையையும் பெண்ணின் மென்மையையும் பெற்றது தந்தையின் கரங்களும் அரவணைப்பும் என்பதை விவரிக்கின்றன அந்த ஓவியத்தின் பிம்பங்கள்.

இந்த உவமை யாருக்காகச் சொல்லப்படுகிறதோ அவர்களை அடையாளப்படுத்துகின்றார் மூத்த மகன். அவர் எப்போதும் தன் தந்தையுடன் வீட்டிலேயே இருந்தார், ஆனால் தந்தையிடமிருந்தும் அவரது இதயத்திலிருந்தும் தொலைவில் இருந்தார். இந்த மகனும் வெளியேற விரும்பியிருக்கலாம், ஆனால் பயம் அல்லது கடமை காரணமாக அவர் அந்த உறவில் அங்கேயே இருக்கின்றார். நமது விருப்பத்திற்கு எதிராக நாம் ஓரிடத்தில் நம்மைத் தகவமைத்துக் கொள்ளும்போது, ​​நமக்குள் நாம் கோபத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகின்றோம். உடனடியாகவோ அல்லது பின்னரோ இந்த கோபம் ஒருநாள் வெடிக்கும்.  அதுபோல இந்நிகழ்வின் இறுதியில் வீட்டிற்குள் வர மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியே கோபத்துடன் நிற்பவர் மூத்த மகனாகத் தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் தான் தனது தந்தையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

தந்தை வெளியே சென்று அவரைச் சந்திக்கிறார். அவர் அவரைக் கடிந்து பேசவில்லை, அவரது கடமையைச் செய்ய அழைக்கவில்லை. மாறாக, தந்தையாகிய தனது அன்பை மூத்த மகன் உணர வேண்டும் என்று விரும்புகிறார். அவர் மூத்தமகனை உள்ளே அழைத்து கதவைத் திறந்து வைக்கிறார். இறைத்தந்தையின் அந்தக் கதவு நமக்காகவும் திறந்தே இருக்கிறது. உண்மையில், இதுதான் எதிர்நோக்கின் நோக்கம். இறைத்தந்தை நமக்காகக் காத்திருக்கிறார், தூரத்திலிருந்து நம்மைப் பார்க்கிறார், எப்போதும் கதவைத் திறந்து வைத்திருப்பார் என்ற எதிர்நோக்கு கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, இந்த அற்புதமான உவமையில் நாம் எங்கே இருக்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். மேலும், இறைத்தந்தையின் இல்லத்திற்குத் திரும்பும் வழியைக் கண்டுபிடிக்கும் அருளினை அவரிடம் நாம் கேட்போம். இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை  நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஏப்ரல் 2025, 14:42

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >