புதன் மறைக்கல்வி உரை - இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
“இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு” என்ற தலைப்பில் தொடர் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிக்கோதேமு, சமாரியப்பெண் ஆகியோரைக் குறித்துக் கடந்த வாரங்களில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். இன்று அதன் தொடர்ச்சியாக சக்கேயு என்னும் செல்வரைச் சந்தித்த நிகழ்வு பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு நாம் செவிசாய்ப்போம்.
லூக்கா 19: 1-5
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
நற்செய்தியில் இயேசு சந்தித்த நபர்களில் சிலர் பற்றிய கருத்துக்களைக் குறித்து சிந்தித்து வரும் நாம் இன்று, சக்கேயுவுடனான இயேசுவின் சந்திப்பு பற்றி சிந்திப்போம். நம்பிக்கையற்ற முறையில் தொலைந்து போனதாகத் தோன்றும் ஒருவராக சக்கேயுவை லூக்கா நற்செய்தியானது நமக்கு முன் எடுத்துரைக்கின்றது. நாமும் சில வேளைகளில் அவரைப் போலவே நம்பிக்கையற்றவர்களாக நம்மை உணர்கின்றோம். சக்கேயு, இயேசு தன்னை ஏற்கனவே தேடிக்கொண்டிருந்ததைக் கண்டறிகின்றார்.
கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள எரிகோ நகரத்திற்குள் இயேசு நுழைகின்றார், எரிக்கோ நரகத்தின் உருவமாகக் கருதப்படுகிறது, அங்கு இயேசு தொலைந்து போனதாக உணருபவர்களைக் கண்டுபிடிக்கச் செல்ல விரும்புகிறார். உயிர்த்தெழுந்த இயேசு, இன்றைய நரக உலகமாகிய, போர்ச்சூழல் நிறைந்த இடங்கள், ஏழை எளிய மக்களின் துயரங்கள், தங்களது பிள்ளைகள் இறப்பதைக் காணும் பெற்றோரின் இதயங்கள், ஏழைகளின் பசி ஆகியவற்றிற்குள் நுழைகின்றார்.
தவறானவற்றைத் தேர்ந்தெடுத்ததாலோ, வெளியேற முடியாத அளவிற்கு வாழ்க்கை அவரைப் போராட்ட சூழலில் தள்ளியதாலோ, சக்கேயு தொலைந்துபோனவராக இருக்கின்றார். லூக்கா நற்செய்தியாளர், சக்கேயு வரிதண்டுபவர் என்று சுட்டிக்காட்டுவதன் வழியாக அவர் உரோமை படையெடுப்பாளர்களுக்காக தனது உடன் குடிமக்களிடமிருந்து வரியினை வசூலிப்பவர், வரிதண்டுபவர்களின் தலைவர், என்று கூறுகின்றார் இதன் வழியாக அவருடைய பாவம் மிகப்பெரியது என்று கூறுகின்றார்.
மேலும் நற்செய்தியாளர் லூக்கா, சக்கேயுவை செல்வர் என்று கூறுவதன் வழியாக மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று செல்வராகி, தனது பதவியை முறையற்ற வகையில் பயன்படுத்துபவர் என்றும் எடுத்துரைக்கின்றார். இருப்பினும் சக்கேயு தன்னை பெரும்பாலும், பிறரால் ஒதுக்கப்பட்டவராக, வெறுக்கப்பட்டவராகவே உணர்கின்றார்.
இயேசு எரிக்கோ நகரத்தின் வழியாகச் செல்கிறார் என்பதை அறிந்ததும், சக்கேயு அவரைப் பார்க்க விரும்புகின்றார். அவருடனான ஒரு தனிப்பட்ட சந்திப்பைப் பற்றி அவர் கற்பனை செய்யக்கூடத் துணியவில்லை. தொலைவிலிருந்து அவரைப் பார்ப்பதே சக்கேயுவிற்குப் போதுமானதாக இருந்தது. சக்கேயு உயரத்தில் குள்ளமானவராக இருந்தார் இயேசுவை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாத அளவிற்கு அவருக்குத் தடைகளும் வரம்புகளும் இருந்தன. இவரைப் போன்றே நமது வாழ்வின் எதார்த்தமும் உள்ளது. நாம் சமாளிக்க வேண்டிய வரம்புகள், தடைகள் பல உள்ளன. அதன் பின்னர் நம்மைச்சுற்றி வாழும் மக்களும் உள்ளனர். மக்கள் கூட்டம் சக்கேயுவை இயேசுவைப் பார்க்கமுடியாத வகையில் தடுக்கிறது. ஒருவேளை இது மக்களின் பழிவாங்கல் செயலாகக் கூட இருக்கலாம். இதைப்போன்று நமக்கும் மக்கள் சிலசமயங்களில் உதவியாக இல்லாமல் இருக்கலாம்.
நமக்குள் ஓர் உறுதியான விருப்பம் இருக்கும்போது, நமது விருப்பத்தை நிறைவேற்றுவதில் நாம் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம். அதற்கான ஒரு தீர்வைக் காண்போம். இருப்பினும் அத்தீர்வைக் காண்பதற்குத் துணிவு நமக்குத் தேவை. குழந்தைகள் போன்று எளிய உள்ளமும் எதைப் பற்றியும் அதிகக் கவலை கொள்ளாமல் இருக்கும் தன்மையும் நமக்குத் தேவை. ஒரு குழந்தையைப் போலவே சக்கேயு ஒரு காட்டு அத்திமரத்தில் ஏறுகின்றார். யார் கண்ணிலும் படாமல், இலைகளுக்குப் பின்னால் மறைந்து கொள்ள, ஏதுவான ஓர் இடமாக அவ்விடம் அவருக்கு இருந்தது.
ஆனால் இயேசுவைப் பொறுத்தவரை நமக்கு எப்போதும் நாம் எதிர்பாராததே நடக்கும் என்பது போல மரத்தின் இலைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த சக்கேயுவைக் கண்டுகொள்கின்றார். இயேசு அத்திமரத்தின் அருகில் வரும்போது, அண்ணாந்து மேலே பார்க்கிறார். சக்கேயு இயேசு தன்னைக் கண்டுகொண்டதை உணர்கின்றார். மக்கள் தன்னைக் கண்டனம் செய்வார்களோ? அவர்களுக்கு இயேசு தன்னைப் பார்த்தது ஏமாற்றமாக இருக்குமோ? என்று எண்ணுகின்றார் சக்கேயு. இந்நிலையில் இயேசு “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” (லூக்கா 19:6) என்று கூறி அவரை ஆச்சர்யமூட்டுகின்றார். தொலைந்துபோனவர்களைத் தேடிக் கண்டடையாமல் கடவுள் ஒருபோதும் கடந்து போக மாட்டார்.
சக்கேயு விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு இயேசுவை வரவேற்றார் என்ற வரிகளின் வழியாக சக்கேயுவின் இதயத்தின் மகிழ்ச்சியை லூக்கா நற்செய்தியாளர் எடுத்துக்காட்டுகிறார். சக்கேயுவின் மகிழ்ச்சி, இயேசுவால் தான் பார்க்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மன்னிக்கப்பட்டதாகவும் தன்னை உணரும் ஒருவரின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கின்றது. இயேசுவின் பார்வை பழிச்சொல்லுக்கான பார்வை அல்ல, மாறாக இரக்கத்தின் பார்வை. இயேசுவின் இத்தகைய இரக்கத்தை ஏற்றுக்கொள்ள நாம் கடினப்படுகின்றோம். அதிலும் குறிப்பாக நாம் தகுதியற்றவர்கள் என்று நினைப்பவர்களை கடவுள் மன்னிக்கும்போது அந்த இரக்கத்தை ஏற்றுக்கொள்ள நாம் சில சமயங்களில் சிரமப்படுகிறோம். கடவுளின் அன்பிற்கு வரம்புகளை விதிக்க விரும்புவதால் நாம் அவர்களுக்கு எதிராக முணுமுணுக்கிறோம்.
இயேசுவை வீட்டில் வரவேற்று உபசரித்த சக்கேயு, இயேசுவின் மன்னிப்பு வார்த்தைகளைக் கேட்ட பின்னர், தனது இறந்த நிலையிலிருந்து எழுந்திருப்பது போல் எழுந்து நிற்கிறார். “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” (லூக்:19: 9) என்று ஓர் உறுதிமொழியினை எடுக்கிறார். இது மன்னிப்பு பெற்றதற்கான விலை அல்ல, ஏனெனில் கடவுளின் மன்னிப்பு விலைமதிப்பற்றது. மாறாக, சக்கேயு கடவுளால் தான் அன்பு செய்யப்பட்டதாக உணர்ந்ததை, அவரைப் பின்பற்றுவதற்கான தனது விருப்பத்தின் அடையாளமாகச் செய்கின்றார். கட்டளையாகச் செய்யவில்லை. மாறாக, அன்பின் வெளிப்பாடாகச் செய்கின்றார். சக்கேயு வெறும் விருப்பம் கொண்ட மனிதர் மட்டுமல்ல, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தெரிந்தவரும் கூட என்பதை வெளிப்படுத்துகின்றார். அவரது நோக்கம் பொதுவானதோ அல்லது சுருக்கமானதோ அல்ல, ஆனால் அவரது வாழ்விலிருந்து தொடங்குகிறது. அவர் தனது வாழ்க்கையைப் பார்த்து, தனது மாற்றத்தைத் தொடங்க வேண்டிய ஆரம்பத்தை அடையாளம் காண்கின்றார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாம் ஒதுக்கப்பட்டவர்களாகவோ அல்லது மாற முடியாமல் போனவர்களாகவோ உணர்ந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க சக்கேயுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். இயேசுவைக் காண வேண்டும் என்ற நமது விருப்பத்தை வளர்த்துக் கொள்வோம், எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எந்த சூழ்நிலையில் தொலைந்து போனாலும், எப்போதும் நம்மைத் தேடி வரும் கடவுளின் இரக்கத்தால் நம்மை மீண்டும் கண்டறிவோம். இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்